தளியின் இந்த இதழுக்காக பாரம்பரிய கட்டுமான வகையை சார்ந்த, செட்டிநாடு பகுதியை பின்பற்றி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்ட கட்டிடக்கலை நிபுணர் பெரியண்ணன் கருப்பையா அவர்களுடன் தளி அமைப்பு ஒரு உரையாடல் நடத்தியது அதன் எழுத்து வடிவம்.
கேள்வி: உங்களை பற்றியும், உங்களின் கல்லூரி வாழ்க்கை பற்றிம் சொல்லுங்கள்
பதில்: வணக்கம். பனிரெண்டாம் வகுப்பு வரும் வரை எனக்கு இப்படி ஒரு படிப்பு இருப்பது தெரியாது. என் அப்பாதான் எனக்காக இதை தேர்ந்தெடுத்தார். என் அப்பாவின் அப்பா, பெரியண்ணன் என்பவர் அந்த காலத்திலேயே எட்டு முதல் பத்து வீடுகள் வரை, அவருக்காகவும் அவரின் நண்பர்களுக்காகவும் கட்டி கொடுத்துள்ளார். என் தாயார் செட்டிநாடு கைவினை கலைகளில் தேர்ந்தவர். கலை, கட்டிடகலை என்ற ஆர்வம் என் மரபணு வழியே எனக்கும் பற்றி இருக்கலாம் என்பது என் எண்ணம். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டிடகலை பள்ளியில் இளங்கலையும், முதுகலையும் முடித்தேன். அப்போதெல்லாம் முந்தைய ஆண்டு மாணவர்களுடன் கலந்துரையாடுதல், அவர்களிடம் கற்றுக்கொள்ளுதல்எல்லாம் அதிகமாக இருந்தது. இப்போது ஒரு வகுப்பிலேயே 160 மாணவர்கள் உள்ளார்கள், அவர்களின் வகுப்பு தோழர்களே அவர்களை நினைவில் வைத்துக்கொள்வதும், விவாதிப்பதும் கூட கடினம் தான்.
கேள்வி: கட்டிடக்கலை படிப்பில் உள்ள அலுவலக பயிற்சியை நீங்கள் எங்கு சென்று முடித்தீர்கள்? அதில் நீங்கள் கற்றுக்கொண்டவை என்ன?
பதில்: அலுவலக பயிற்சியை நான் இரண்டு வகையாக பார்க்கிறேன். முதலில் எல்லா விடுமுறை நாட்களிலும் எண்களின் ஊரில் இருந்த சண்முகம் அண்ணனின் அலுவலகம் சென்றுவிடுவேன். அங்கு அவர்களுடன் சேர்ந்து கட்டுமான துறை பற்றி அறிந்துக்கொள்வேன். இரண்டாவது கல்லூரியின் பயிற்சி காலத்தின் நான் பெங்களுரு சென்று அங்கு படால் கர் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அங்கு இருந்த அலுவலக அமைப்பு, கட்டிடக்கலை நிபுணர்களுடனான கலந்துரையாடல்கள் அனைத்தும் அருமையானவை. மேலும் அந்த அலுவலகம் கர்நாடக மாநிலத்தின் வீட்டு வசதி வாரியத்தின் கீழ் பல கட்டிடங்களை வடிவமைத்தும் , கட்டியும் கொடுத்து வந்தது. அந்த வகையில் அதில் பல நிறுவனங்களும், கட்டிடக்கலை நிபுணர்களும் பங்கெடுத்தனர். அதனால் பலருடன் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
எங்களின் செட்டியார் குடும்பங்களில் ஒரு வழக்கம் உண்டு, அதாவது பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் அந்த குடும்பத்தின் பிள்ளைகள், பிற குழுவோடு சேர்ந்து வேலைகளை கற்றுக்கொண்டு மேலே வரவேண்டும். எடுத்தவுடன் எந்த இடமும் அவர்களுக்கு கொடுக்கபடாது. பயிற்சி செய்து அவர்கள் அதை பெறவேண்டும். அதை போலவே நானும், கல்லூரி முடிந்து ஒன்றரை வருடம் ஒரு கட்டிடக்கலை அலுவலகத்திலும், ஒன்றரை வருடம் interior design எனப்படும் கட்டிடத்தின் உள் அமைப்பை வடிவமைக்கும் அலுவலகத்திலும், ஒன்றரை வருடம் கட்டுமானத்துறை அலுவலகத்திலும் வேலை செய்தேன். பிறகு 2000 ஆம் ஆண்டில் என்னுடைய அலுவலகத்தை திறந்தேன்.
கேள்வி: உங்களின் முதல் கட்டிட வடிவமைப்பு பற்றியும், அதில் நீங்கள் கற்றுக்கொண்டவை பற்றியும்
பதில்: நான்காம் ஆண்டு படிக்கும்போது அண்ணனின் நண்பர் ஒருவர் முசிறியில் இருந்தவர், அவருக்கு வீட்டுடன் இணைந்து சிறிய மருத்துவமனை போன்ற வடிவமைப்பு தேவை என்றும், நான் அதை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால் நான் இன்னும் படித்து முடிக்கவில்லை அண்ணா, வேறு யாரையாவது கேளுங்கள் என்ற போதும் விடாமல் என்னால் முடியும் என்று கூறி வடிவமைத்து தர சொன்னார். இந்த பணியில் என் சக வகுப்பு மாணவர்களும், என் முந்தைய ஆண்டு வகுப்பில் சித்தார்த்தன் என்ற நண்பரும் பேருதவி செய்தனர். வெளிநாடுகளுக்கு செல்ல முடியாத சூழல் காரணமாக நான் அண்ணா பல்கலை கழகத்திலேயே கட்டிடக்கலையில் முதுகலை முடித்தேன். எங்களுக்கு பழங்கால கட்டிடக்கலையில் கட்டிய கட்டிடங்களை பராமரிக்கும் பாடத்தை எடுக்க ராமகிருஷ்ண ராவ் என்ற ஆசிரியர் இருந்தார். இந்த துறையில் எனக்கு விருப்பம் இருந்ததால், அவரிடமே அலுவலக பயிற்சியும், படிப்பு முடிந்த பின் வேலைக்கும் சேர்ந்துக்கொண்டேன். அவரே எனக்கு முதலில் கட்டிடத்தை வடிவமைக்கும் வாய்ப்பையும் தந்தார்.
1994ல் மடிப்பாக்கத்தில் ஒரு வீடு வடிவமைக்கும் வாய்ப்புகிடைத்தது. ராவ் அவர்கள், அவர் அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்களுக்கு தனியே அலுவலகம் அமைத்து பயிற்சி செய்யவும் ஊக்குவிப்பார். இதையேநானும் என் அலுவலகத்தில் பின்பற்றுகிறேன். ஒன்றரை வருடங்கள் எங்களின் அலுவலகதில் வேலை செய்தால் அவர்கள் தனியே பயிற்சி செய்து, நல்ல கட்டடக்கலை நிபுணராகவும் வந்துவிடுவார்கள். அதற்கான எல்லா பயிற்சியும் அவர்களுக்கு தரப்படுகிறது. அதைபோலவே கல்லூரியின் வழியே பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கும் ஒரு சிறிய வீடு, ஒரு அடுக்குமாடி வீடு, ஒரு வீட்டின் உள்அமைப்பை வடிவமைக்கும் முறை என்று மூன்று வேலைகள் அவர்களுக்கு தரப்படும். இதிலே அவர்கள் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் 45 வரைபடங்கள் வரை தயார் செய்து மெருகேறி விடுவர்.
கேள்வி : அலுவலகத்தின் பெயர்
பதில்: 2000 ஆம் ஆண்டு அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட போதுபெரியண்ணன் Associates என்று பெயரிட்டோம். பல ஆண்டுகள் ஆனதால் பெயர் பழைய பெயராகவும், உள்ளே வரும் இளைஜர்களை ஈர்ப்பதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் புதிய பெயர் மாற்றினோம். பல பெயர்களை யோசித்துவிட்டு, Apdo – archi peri design office , கட்டிடகலை நிபுணர் பெரியின்அலுவலகம் என்பது பொருள்.
கேள்வி: வடிவமைப்பில் நீங்கள் பின்பற்றும் கொள்கை என்ன?
பதில்: “ நாம் வாழும் இடம் நம் எண்ணங்களை தீர்மானிக்கிறது “ என்பது வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் வார்த்தை. அதை பின்பற்றி நாங்கள் எங்களின் வடிவமைப்பு எங்கள் பயன்பாட்டாளர்களின் வாழ்வில் வாழ்வியில் முறை மாற்றங்கள், மகிழ்ச்சி, வியாபார முன்னேற்றம் போன்றவற்றை எங்களின் வடிவமைப்பு கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். எங்களின் பயன்பாடளர்களும் இத்தகைய மாற்றங்கள் அவர்களின் வாழ்வில் நடக்கிறது என்று கூறும் போது மகிழ்ச்சியாக உணர்கிறோம்.
கேள்வி: vernacular என்பதை எப்படி விளக்குவீர்கள்
பதில்: என் வரையில், செட்டிநாட்டு கலைபாணி என்பது அந்த ஊருக்கே உரிய பாணி. அங்கு கிடைக்கும் கட்டுமான பொருட்கள் கொண்டு, கைவினை கலைஞர்கள் கொண்டு, அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வழி. மேலும் அது அவர்களின் சமூக, கலாசார, காலநிலை மற்றும் மக்கள் சார்ந்த கட்டுமானம். செட்டிநாட்டை தாண்டி, அந்த கலைபாணியில் நாம் வேறு இடத்தில் கட்டிடங்கள் கட்டுவது சரியாகாது. அது அந்த இடத்திற்கான முறை மட்டுமே. அதனாலேயே நாங்கள் சென்னையில் அந்த பாணியில் வீடுகள் கட்டுவதில்லை, செட்டிநாட்டில் வேறு பாணியில் வீடுகள் அமைப்பதையும் தவிர்க்கிறோம்.
சென்னையை பொறுத்தவரை வீடுகளில் கண்ணாடிகள் பயன்படுத்துவதையும் முடிந்தவரை குறைக்கிறோம். நம் காலநிலைக்கு அது தேவையற்றது. அப்படி உள் , வெளி இடைவெளியை குறைக்கும் எண்ணம் இருந்தால், ஒரு வராண்டாவை பயன்படுத்தலாம் . அது பல நிலைகளில் நம் வடிவமைப்பை மெருகேற்றும். அதிலும் நகரத்தார் குழுவினர், சென்னையில் வீடு கட்டும் போது செட்டிநாட்டு பாணியை போன்று அமைக்காமல், சில இடங்களை எங்களின் தேவைக்கு என்று மாற்றிக்கொள்கிறோம். பயன்பாட்டுமுறை , சில விழாக்களுக்கான இடம், வீட்டு விஷேசங்களுக்கான தேவைகள் போன்றவற்றுக்கு ஏற்ப வடிவமைப்பை மாற்றுகிறோம்.
எடுத்துகாட்டாக எங்களின் சொந்த வீட்டை செட்டிநாட்டில் புதிதாக கட்டியுள்ளோம் நானும், என் அண்ணன் அவர்களும். இருவருக்கும் ஒரு மகன்கள் உண்டு.
இரண்டு வீட்டாரும் , ஒரு பொது முற்றம் வைத்து, உபயோகப்படுத்தும் விதமாக வடிவமைத்தோம். தனித்தனியாக இரண்டு வீடும் பயன்படுத்திக்கொள்ளலாம் , சேர்ந்து விழாக்கள் கொண்டாடலாம். ஆண்கள் முன்னறையிலும் , பெண்கள் முற்றத்திலும், மகன்கள் இருவருக்கும் மேலே முதல் மாடியில் ஒரு அறையும் அமைத்திருக்கிறோம். பின்னாளில் அவர்களுக்கு திருமணமாகி மருமகள் வந்தாலும், அவர்கள் அந்த அறையை பயன்படுத்திக்கொள்ளலாம். மாற்றங்கள் செய்தாலும் செட்டிநாட்டு கலை பாணியை பின்பற்றி அதன் தன்மை மாறாமலும், எங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் அமைத்துள்ளோம்.
கேள்வி : Reach chettinad – இன் செயல்பாடுகள் என்ன
பதில்: முக்கியமாக செட்டிநாடு பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். Unesco செட்டிநாடு வீடுகளை பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்துள்ளது. நிறைய மாற்றங்கள் வந்தாலும் இந்த கட்டிடங்கள் நகரத்தாரின் வாழ்வியல், கலாசார, சமூக சின்னமாக உள்ளது. இதை ஆரம்பித்த பிறகு ஒரு பத்து வீடுகளை செட்டிநாடு பாணியில் கட்டியிருக்கிறோம். பழைய வீடுகளை இடித்து விட்டு கட்டும் எண்ணத்தில் இருந்தவர்களை சமாதானப்படுத்தி வீடுகளை சீர்படுத்தி கொடுத்துள்ளோம். இன்னும் நாற்பது வருடங்களுக்கவது அவை நல்ல முறையில் இருக்கும்.
மேலும் செட்டிநாட்டில் அதன் கலைபாணியை அங்கீகரிக்கும் விதமாக பயிற்சி பட்டறை, கலாசார விழாக்கள், மரபு நடைகள் போன்றவற்றை நிகழ்த்தும் எண்ணம் உள்ளது. முன்னாட்களில் பெரும்பாலும் நகரத்தார் சமூகத்தின் ஆண்கள் மட்டுமே வியாபார வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்வார்கள் . ஆனால் இன்று, பெண்களும், பிள்ளைகளும் கூட படிக்க, வேலை என்று வெளியேறுகின்றனர். அதனாலேயே செட்டிநாட்டு வீடுகள் இன்று யாருமற்று காணப்படுகிறது. செட்டிநாடு பாணி என்பது வெறும் வீடு அல்ல, அது ஒரு சமூக அமைப்பு. நகரமும், வீடும் சேர்ந்தது. சில மாற்றங்களை இன்றைய தேவைக்கு ஏற்ப செய்யும் போது இவை இன்னும் பல ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும். நம் வேர்களை தேடி நாம் செல்ல வேண்டிய அவசியத்தை நம் பிள்ளைகளிடம் கொண்டு செல்ல வேண்டியது முக்கியம்.
எங்களின் பராமரிப்பு பணியில் நாங்கள் பின்பற்றுவது ஐந்து வகைகள். அவை repair, renovation, restoration, reconstrocution, retrofitting/adapative reuse. சீர்படுத்துவது, பராமரிப்பது, மீண்டும் கட்டுவது, சரிசெய்வது, அந்த கட்டிடத்தை வேறு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது என்பது. இந்த பத்து வருடத்தில் நாங்கள் நல்ல செட்டிநாட்டு கலைபாணியில் வேலை செய்யும் குழுக்களை பயிற்சி கொடுத்து உருவாக்கியுள்ளோம்.
நாங்கள் செட்டிநாடு பாணியில் மாடி கை சுவரில் பதிக்கப்படும் பன்னீர் சொம்பு இப்போது பயன்பாட்டில் இல்லை. விருத்தாசலம் அருகில் ஒருவர் இதை செய்வதாய் கேள்விப்பட்டு சென்றோம். பதினாறு முறை சென்று, உரையாடி மாதிரிகள் செய்து அதன் தன்மையை புரிந்துக்கொண்டு பத்தாவது முயற்சியில் நாங்கள் எதிர்பார்த்த வடிவமும், அளவும் கிடைத்தது. மேலும் வண்ணங்கள் பெறவும் பல முயற்சிகள் செய்ய வேண்டி இருந்தது. மேலும் இதை நம் கட்டிடங்களில் மட்டும் இல்லாமல், அந்த பகுதியில் கட்டப்படும் பல வீடுகளில் இப்போது பயன்பாட்டில் உள்ளது.
கேள்வி: மரபு கட்டுமானத்தை தொழில்முறையாக கொள்ள என்ன செய்யலாம்
பதில்: எந்த இடத்தின் மரபு கட்டுமானத்தை பின்பற்ற விரும்புகிறிர்களோ அங்கு தங்குங்கள். அவர்களின் வாழ்வியல் முறையை கவனியுங்கள். அடிக்கடி அங்கு பயணம் செய்யுங்கள். அப்போதுதான் ஒரு புரிதல் வரும். நான் சென்னையில் வசித்தாலும் மாதத்திற்கு இரண்டு முறை வளையப்பட்டி சென்று விடுவேன். அங்கு உள்ள மக்கள், அவர்களின் பழக்க வழக்கம், வாழ்வியல் மாற்றங்கள், போன்றவற்றை புரிந்துக்கொண்டால்தான் கட்டிடங்களை புதுப்பிக்கும் போது உதவியாக இருக்கும். எப்படி இப்போது யோகா பல ஆண்டுகளாய் உடலையும், மனதையும் சீராக வைக்க பயன்படுகிறதோ அதை போலவே இந்த பழைய கட்டுமான முறைகளும், கட்டிடங்களும் நம்மை மகிழ்ச்சியாக வைக்கும். நமக்கு அவை பிடித்திருக்க வேண்டும், அதன் பின்னால் உள்ள சமுதாய கலாச்சார தொடர்புகளை தெரிந்துகொள்ள ஆர்வம் வேண்டும். பயன்பாட்டாளர்களை இதன் பக்கம் இழுக்கும் முறையை அறிந்திருக்க வேண்டும்.
எனக்கு ஆசிரியர் ஆவதற்கும், தனியே தொழில் தொடங்கவும், பெருநிறுவனங்களில் வேலை செய்யவும் வாய்ப்பு கிடைத்தபோது, நான் தொழில் தொடங்கவே முடிவு செய்தேன். இப்போது பல கல்லூரிகளில் சிறப்பு விரிவுரையாளராகவும், பல பெரு நிறுவனங்களை வடிவமைக்கவும் என் தொழில் எனக்கு துணையாய் இருக்கிறது.
கேள்வி: Sunday status பற்றி
பதில்: வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்கிறோம், ஒரு நாள் விடுமுறை. ஞயற்று கிழமை மாலை பொழுது என்னக்கானது. அதில் சில விசயங்களை படித்து அதை பற்றிய பதிவை sunday status என்று 2010 ஆம் ஆண்டு முதல் எழுதி வருகிறேன். இதில் இரண்டு பகுதி இருக்கும். முதலில் தகவல், இரண்டாவது பெரியின் குறிப்பு என்று என் எண்ணங்களை பதிவு செய்திருக்கிறேன். படித்து பாருங்கள்.
அடுத்த தலைமுறை கட்டிடக்கலை நிபுணர்களுக்கும், மாணவர்களுக்கும் நான் சொல்வது நீங்கள் வெற்றியாளராக வர நான்கு விசயங்களை பின்பற்றுங்கள்.முதலில் உங்கள் எண்ணத்தில் நிலையான ஒரு தன்மையை கொள்ளுங்கள், இரண்டாவதாக நிறைய மக்களை தொடர்பு படுத்திக்கொள்ளுங்கள் , மூன்றாவதாக உங்களின் திறமைகளை வளர்த்துக்கொளுங்கள், நான்காவது உங்களின் தலைமையை முடிவு செய்யுங்கள். நீங்கள் என்ன கற்க வேண்டும் என்பதை, எங்கு கற்க வேண்டும் என்பதையும் முடிவு செய்தாலே இதை எட்டிவிடலாம்.
நன்றி .