காலநிலை மாற்றமும் கட்டடக்கலையும் – Ar. சஞ்சய் மொஹே

கட்டிடக்கலை வடிவமைப்பாளர் திரு. சஞ்சய் மோஹே அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நடத்தினோம். அவர் பெங்களூரில் மைன்ட் ஸ்பேஸ், எனும் ஒரு கட்டிடக்கலை வடிவமைப்பு நிறுவனத்தை நடத்துகிறார். இந்த நிறுவனம் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை சார்ந்த இடங்களை வடிவமைப்பது என்ற கோட்பாடுகளுடன் இயங்கி வருகிறது.

தளியின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவரின் பதில்களை காண்போம்,

கேள்வி: நாம் வடிவமைக்கும் கட்டிடங்கள் நம்முடைய கலாச்சாரத்தையும் அது இருக்கும் இடத்தையும் எப்படி ஒருங்கிணைக்க வேண்டும்.

நாம் ஒரு கட்டிடத்தை வடிவமைக்கும் பொழுது அது எந்த இடத்தில் உள்ளது என்று பார்ப்போம். நம்முடைய இடம் இருக்கும் திசையை பொறுத்து சூரிய ஒளி, வெப்பம், காற்று, அந்த இடத்தில் உள்ள நீர் நிலைகள், மரங்கள், பாறைகள், நிலம் எந்த பக்கத்தில் சரிவாக உள்ளது என்பதை கருத்தில் கொள்வோம். பெரும்பாலும் இவை அந்த நிலத்தின் தன்மை, இதை நாம் ஒரு குறையாக எடுத்துக் கொள்ளாமல், அங்கு நமக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுகூலமாக பார்க்கும் பொழுது அதை புரிந்து கொள்ள முடியும். நம்மை நம்முடைய பெற்றோர்கள் வளர்க்கும் பொழுது பல பழக்க, வழக்கங்களை கற்பிக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, நம்முடைய செருப்பை வீட்டிற்கு வெளியில் விடுவதும், தரையில் அமர்ந்து சாப்பிடுவதும் நாம் வாழ்வியல் முறை. இப்படியான வாழ்வியல் முறைகள் ஐரோப்பிய நாடுகளில் இல்லை. ஏன் என்று யோசித்தோமானால், நம்முடைய காலநிலை நமக்கு இதற்கான வாய்ப்பை தருகிறது. அங்கு அப்படி தலையில் அமர்வதற்கான காலநிலை சாத்தியங்கள் இல்லை. அதனால் தானாகவே நம்முடைய கலாச்சாரம் நம் வடிவமைப்பை மேம்படுத்துகிறது.

கேள்வி:  ஒளி எப்படி மைண்ட் ஸ்பேஸ் நிறுவனத்தின் முக்கிய வடிவமைப்பு பொருளாக மாற்றம் பெற்றது?

ஒளி மட்டுமே எங்களின் கரு பொருள் இல்லை. இயற்கை சார்ந்த வடிவமைப்புகளை செய்ய வேண்டும் என்ற எங்களின் முயற்சிக்கு ஒளியும் ஒரு காரணி. அதேபோலவே எங்கள் இடத்தில் உள்ள மரங்கள், இயற்கை சார்ந்த விஷயங்களையும் வடிவமைப்பில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முயற்சியை செய்கிறோம். நாம் ஒளியை நம் அறைக்குள் கொண்டு வரும் பொழுது, அது நிறைய வெப்பத்தையும் உள்ளே செலுத்துவதற்காக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நாம் வடிவமைக்கும் அறை நம் தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அதைப் போலவே 12 மாதங்களிலும் நமக்கு வெளியில் இருந்து வரும் ஒளி வெவ்வேறு தன்மையை கொண்டு இருக்கும். ஒரு நாளிலே கூட காலையில் இருந்து மாலை வரை நம் அறைக்குள் வரும் ஒளியின் தன்மை வேறுபட்டதாகும். இது அந்த அறையை நாம் பயன்படுத்தக்கூடிய விதத்தையும் மாற்றக்கூடியது. நம்முடைய எண்ணங்கள், நம் செயல்களின் மீதும் இந்த ஒளியின் தாக்கம் உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம். எங்களின் இத்தனை வருட அனுபவத்தில் நாங்கள் இந்த இயற்கை ஒளியை எப்படி கையாள வேண்டும் என்று கற்று இருக்கிறோம்.

கேள்வி: நாம் நம் இடத்தில் பயன்படுத்தக்கூடிய மரங்கள் மற்றும் அதன் தாக்கங்கள் என்ன?

பெரும்பாலும் நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இடத்தில் உள்ள மரங்களை எங்கள் வடிவமைப்பில் தக்க வைத்துக் கொள்ளவே நினைப்போம். ஒருவேளை அப்படி மரங்கள் இல்லாத பட்சத்தில் எங்களின் தாழ்வாரங்களில் மரங்கள், செடிகளை கொண்டு வர முயற்சிக்கிறோம். நாம் ஒரு அறையில் இருந்து கொண்டு நம்முடைய வெளிப்புறத்தையும், உட்புறத்தையும் அனுபவிக்கும் படி எங்கள் அமைப்பை உருவாக்குகிறோம். பெரும்பாலும் எங்கள் அறைகளின் சுவர்கள் எல்லையை உருவாக்காமல், அறைக்குள்ளே இருந்து கொண்டு வெளிப்புற இயற்கை சூழலை நாம் அனுபவிக்க எங்களின் வடிவமைப்பு உதவி செய்கிறது. இதை நாங்கள் கொரியா, தோஷி, பாவா போன்றவர்களின் கட்டிடங்களில் இருந்து கற்றுக் கொள்கிறோம்.

கேள்வி: ஒரு கல்வி நிறுவனத்தின் கட்டிடத்தை உருவாக்குதல் உள்ள சவால்களை பற்றி கூறுங்கள்

பெரிய சவால் என்னவென்றால், இதன் உரிமையாளர் எங்களிடம் இந்த கட்டிடம் அதில் உள்ள மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று கேட்டார். ஒரு ஆசிரியரோ, ஒரு நண்பரோ, ஒரு குடும்ப நபரோ ஒருவரை ஊக்கப்படுத்த முடியும். ஒரு கட்டிடம் எப்படி அதை செய்ய முடியும்? எதற்காக ஊக்கத்தை தர வேண்டும் என்ற கேள்வியும் உள்ளது. ஒரு பெரிய கட்டிடத்தை பார்த்து, பார்த்து வளரும் மாணவர் தன்னுடைய வாழ்க்கையும் அவ்வாறு உயர வேண்டும் என்ற எண்ணம் கொள்ள உறுதுணையாக இருக்கும். அதைப்போலவே அவருடைய செயல்பாடுகள் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்குகிறது. அதைத் தாண்டி எல்லா அறைகளும் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதை நாம் ஏற்கனவே கற்று தெரிந்திருக்கிறோம். இந்த ஊக்கமளிக்கும் விஷயம் பெரும் சவாலாக இருந்து அதற்கான வடிவமைப்பையும் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கேள்வி: வளர்ந்து வரும் கட்டிடக்கலை மாணவர்கள் தங்களை தொழில் முறை வடிவமைப்பாளராக மாற்றிக் கொள்ள என்ன முயற்சிகள் செய்ய வேண்டும்,

அவர்கள் தாங்கள் செய்யும் விஷயங்களில் உறுதியாகவும், பெருமையும் கொள்ள வேண்டும். அதை தவிர வேறு எதுவும் தேவைப்படுவதில்லை.அவர்களின் வாழ்வின் ஒரு பகுதி, இதை அவர்கள் மகிழ்ச்சியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மிக முக்கியமானது. அவர்களின் முயற்சிகள் அவர்களை பெருமை கொள்ள செய்கிறது என்று எண்ணம் உறுதியாக அவர்களுக்கு இருக்க வேண்டும். சவால்கள் நாள்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. நிறைய விஷயங்களை நாம் கற்றுக் கொண்டே இருக்கிறோம்.நிறைய மனிதர்களை நாம் பார்க்கும் பொழுது நமக்கு பலவிதமான பொருளாதார, அரசியல் அழுத்தங்கள் இந்த துறையில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நாம் இங்கு நிலைத்து நிற்க வேண்டும் என்றால், நம்முடைய செயல்பாடுகளில் நாம் பெருமை கொள்ள வேண்டும். நம் முயற்சிகளை உறுதியாக செய்து கொண்டிருக்க வேண்டும்.

கலந்துரையாடலை நிகழ்த்தியதற்கு தளிக்கு நன்றி. வாழ்த்துக்கள்.

மறுமொழி இடவும்