கட்டடக்கலை வல்லுநர் கையேடு 2022 – Ar. மனோகரன் ஜெயராமன்

COA எனும் Council of Architecture கட்டிடக்கலை வல்லுநர்களுக்கான கூட்டமைப்பு 2022 ஆம் ஆண்டு கட்டடக்கலை வல்லுநர்களுக்கான தொழில் நடத்தும் முறையைக் குறித்த ஒரு கையேட்டை வெளியிட்டு இருக்கிறது. 1983 ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டில் கட்டிடக்கலை கற்பித்தல் குறித்த ஒரு கையேடு பெரும் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு தொழில் முறை வல்லுநர்களுக்கான கையேடு பல வருடங்களாக மேம்படுத்துத்தாத காரணத்தினால் இந்த குழுவின் தலைவர் திரு. ஹபீப் கான் அவர்களின் பெரும் முயற்சியால் இது 2022 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த குழுவில் இந்தியாவைச் சேர்ந்த ஏழு கட்டிடக்கலை நிபுணர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்கள் அனைவரும் தங்களின் துறையில் அனுபவமும், பயிற்சியும் கொண்டவர்கள். இவர்களின் இந்த முயற்சிக்கு டெல்லி கவுன்சில் அலுவலகத்தின் உதவியும், துணைத் தலைவர், பதிவாளர் அவர்களின் உதவியும் இருந்தது. ஆரம்பக் கட்டத்தில் இந்த கையேடு ஆறு தொகுதிகளைக் கொண்டு வெளியிடப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, அதற்கான உள்ளடக்கங்கள் தெளிவாக விவாதிக்கப்பட்டது.

இந்த முயற்சியில் இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து கட்டிடக்கலை வல்லுனர்கள் இணைந்து இருந்தார்கள். இமாச்சல பிரதேசத்திலிருந்து விஜய் உப்பல், மும்பையைச் சேர்ந்த சந்தீப் சிக்கரே, சாலிக் ரன்தீவ், புனேவில் சேர்ந்த பிரசாந்த் சுத்தாரியா, திருவனந்தபுரத்திலிருந்து மகேஷ் ஐயர், பாண்டிச்சேரியிலிருந்து வைத்தியநாதன் மற்றும் சென்னையிலிருந்து மனோகர் ஜெயராமன். அனைவரும் தத்தம் துறைகளில் பல வருட அனுபவங்களும், கட்டிடக்கலை வடிவமைப்பு பெரும் ஊக்கமும் கொண்டவர்கள்.

 

இந்த புத்தகத்தைப் பற்றி விரிவாக அறியத் திரு. மனோகர் ஜெயராமன் அவர்கள் தந்த பேட்டியிலிருந்து சில குறிப்புகள்.

கொரோனா காலகட்டத்தில் நமக்குக் கிடைத்த மிகப்பெரிய தொழில்நுட்பம் இணையம் வழியாக மற்றவருடன் கலந்துரையாடல் செய்வது. அப்படியாக நாங்கள் 64 கலந்துரையாடல்களை இந்த கையேட்டிற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் 3 மணி நேரம் நிகழ்த்தி இருக்கிறோம். சில நேரங்களில் நாங்கள் சனிக்கிழமைகளிலும் இதற்காகச் சந்தித்து உரையாடி இருக்கிறோம். இவை அனைத்தும் குறிப்பெடுக்கப்பட்டு, அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இறுதியில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த புத்தகம் ஐந்து தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் முதல் தொகுதி ஒரு கட்டிடக்கலை வல்லுநரின் வரையறைகளையும், வழிகாட்டுதல்களையும் பற்றியது. ஒரு கட்டிடக்கலை வல்லுநர்களுக்கு மட்டுமல்லாது, கட்டுமான துறையில் உள்ள அனைவருக்கும், கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்ற தேவை இருப்பவர்களுக்கும், கட்டடக்கலை இதழியல் சார்ந்த பணியாற்றுபவர்களுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 1972ல் கட்டிடக்கலை வல்லுநர்களுக்கான சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதில் எந்தவிதமான மேம்பாடும் செய்யப்படவில்லை. அதன் ஒரு தொடர்ச்சியாக இதைப் பார்க்கலாம். இதில் ஒரு கட்டடக்கலை வல்லுநர் தொழில்முறையில் பிற துறைகளில் எவ்வகையான பங்களிப்பைத் தரலாம் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது தொகுதியை, தம்மை எந்த வகையில் எல்லாம் அமர்த்திக் கொள்ளலாம் அல்லது நிறுவிக்கொள்ளலாம் என அறிந்து கொள்ளத்தக்க வகையில் உருவாக்கியுள்ளோம். இதுவும் கட்டிடக்கலை கலைஞர்களுக்கு மட்டுமானதாக இல்லாமல் அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் உள்ளது. இதில் ஆறு வகையான முறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதைப்போலவே எப்படி ஒரு கட்டிடக்கலை சார்ந்த போட்டிகள் நடத்த வேண்டும் என்பது குறித்த தகவலும் இதில் உள்ளது. அந்த போட்டி யாருக்கானது, அதற்கான நெறிமுறைகளை எப்படி உருவாக்க வேண்டும் அதற்கான ஒழுங்கு முறைகள் எப்படி இருக்க வேண்டும், என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாகப் போட்டிகள் வெறும் யோசனைகளாக இருக்கலாம், சிலருக்கு மட்டும் கொடுக்கப்பட்ட அழைப்பாக இருக்கலாம், யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம் என்ற வகையிலும் இருக்கலாம். அதேபோல நடுவர்கள் எந்த வகையினராக இருக்க வேண்டும் என்றும், அவர்கள் எப்படி அந்த வடிவமைப்பை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

தொகுதி மூன்று, கட்டிடக்கலை ஒப்பந்தங்கள் பற்றியது. இன்றைய காலகட்டத்தில் இளம் வயது வடிவமைப்பாளர்கள் எதையும் எழுத்துப்பூர்வமாக அணுகுவது கிடையாது. ஆனால் இது பல நேரங்களில் அவர்களுக்குப் பாதகமாக முடிகிறது. அதைச் சரி செய்யும் விதமாக இந்த தொகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் நாம் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கும் பொழுது, அதில் என்னென்ன விவரங்களைத் தர வேண்டும் என்றும், அதை எந்தெந்த வகையில் எழுதலாம் என்றும் கொடுத்திருக்கிறோம். எழுத்துப்பூர்வமாக நாம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கிறோம், என்னென்ன சேவைகளைச் செய்து கொடுப்போம் என்பது பற்றியும், அதில் ஒரு கட்டிடக்கலை வல்லுநரின் பங்கு என்ன என்றும், வாடிக்கையாளரின் பங்கு என்ன என்றும் நாம் தெளிவாகக் குறிப்பிட்டுக் கொள்ளலாம். அதேபோல பெரிதாக எழுதும் பழக்கம் இல்லாமல் போனதால் மூன்று வகையான ஒப்பந்த மாதிரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதலாவது துல்லியமாக அல்லது சிறிதாக நமக்குத் தேவையான விவரங்களை மட்டும் கொடுத்து ஒப்பந்தத்தை எழுதுவது, நாம் பெரிய கட்டுமானங்களை உருவாக்கும் பொழுது அதிகமான தகவல்களைப் பதிவு செய்து நீண்ட ஒப்பந்தத்தை உருவாக்குவது, மூன்றாவது பழக்கத்தில் பொதுவாக இருக்கும் ஒப்பந்த முறையைப் பின்பற்றி எழுதுவது.

நான்காவது தொகுதி, நமக்கு எப்போதும் பேசு பொருளாக இருக்கும் சேவைகளையும், கட்டணங்களையும் குறித்த குறிப்புகளை உள்ளடக்கியது. இதைக் குறித்த பல செய்திகள் இருந்தாலும் தெளிவாக இதைப்பற்றிய புரிதல் இன்றைய தலைமுறையினருக்கும் இல்லை. ஐந்து சதவீதம் என்பதைக் கட்டணமாகத் தீர்மானித்துக் கட்டிடக்கலை வல்லுநர்களின் குழு வெளியிட்டுள்ளது. ஆனால் ஐந்து சதவீதம் என்பதை எப்படித் தீர்மானித்தார்கள் என்ற கேள்விக்குச் சரியான பதில் இல்லை. அதனால் இந்த புத்தகத்தில் எந்த வகையான கட்டுமானம் அது?, என்ன அளவினது?, அதில் உள்ள வேலைகளின் தன்மை எத்தகையது? என்பதைக் குறித்து கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறோம். இதில் பத்து வகையான கட்டுமான மாதிரிகள், அது எத்தகைய தன்மையைக் கொண்டுள்ளது என்பதைப் பொறுத்து நாம் கட்டணத்தை நிர்ணயிக்கலாம். அதேபோலவே பெரிய கட்டுமானங்களில் கட்டிடக்கலை வல்லுநர் கட்டமைப்பு, பிளம்பிங், போன்ற ஆலோசகர்களுடன் சேர்ந்து வடிவமைப்பைச் செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் அப்படியான கட்டிடங்களுக்கும் கட்டணங்கள் நிர்ணயிக்க வகை செய்யப்பட்டுள்ளது. அதேபோலவே உட்புற வடிவமைப்பு செய்பவர், பெரிய கட்டிடங்களைப் பராமரிப்பு செய்யக் கட்டணங்கள் நிர்ணயிப்பது எப்படி என்றும் கொடுத்திருக்கிறோம். வரிகள் எப்படி கணக்கிடுவது என்ற குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நிலுவையில் சதுர அடி மற்றும் சதுர மீட்டர் கணக்கில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அதனால் அந்த முறையில் எப்படி கட்டணங்களைத் தீர்மானிப்பது என்றும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஐந்தாம் தொகுதியில், “ஒரு கட்டட வடிவமைப்பு நிறுவனத்தை எப்படி வழிநடத்துவது” என்று விவாதித்து இருக்கிறோம். பல வருடங்கள் இந்த துறையில் இருந்தவராயினும், புதிதாக நிறுவனத்தை துவங்குபவராயினும் அனைவருக்கும் இது ஒரு சவாலானதாகவே பார்க்கப்படுகிறது. முதலாவதாக கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சரில் பதிவு செய்து கொள்ளும்படி அறிவுறுத்துகிறோம். அதன் பிறகு நாம் வேலை செய்ய தேவையான இடம் எப்படி இருக்க வேண்டும், நம் நூலகம் எப்படி இருக்க வேண்டும், நாம் என்ன மாதிரியான அட்டவணைகளை சேகரிக்க வேண்டி இருக்கிறது, நம் வரைபடங்களை எப்படி பாதுகாப்பது, நம்மிடம் வேலை பார்க்கும் பிற வல்லுனர்கள் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விவாதித்து இருக்கிறோம். இதன் ஒட்டுமொத்த கூட்டமைப்பாகவே இந்த தொகுதியை நான் பார்க்கிறேன்.

இப்படியான ஒரு விரிவான கையேடாக இந்த ஐந்து தொகுதிகள் உள்ளது. இதில் எங்களது அனுபவம், இத்துறை சார்ந்த அறிவு எங்களின் முயற்சியால் அனைத்தையும் பதிவு செய்து செய்திருக்கிறோம் . இது பொது மக்களையும், கட்டிடக்கலை வல்லுனர்களையும் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் புத்தகம் மும்பையில் வெளியிடப்பட்ட பிறகு, கேரளாவில் கேரள முதல்வருக்கு அளித்ததோடு மக்களையும் இது சென்று சேர வேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அதேபோலவே இந்திய கட்டடக்கலை நிபுணர்களுக்கான கூட்டமைப்பான ஐ.எ.ஏ வழியாகவும் இதை மக்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்

நன்றி.

மறுமொழி இடவும்