கடந்த 6 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இந்திய கட்டடக்கலை (IIA) கூட்டமைப்பு நடத்திய கட்டடக்கலை சார்ந்த பேச்சுக்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. மூன்று அனுபவம் மிக்க கட்டடக்கலை அறிஞர்களின் பேச்சு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினர்.மூன்று வகையான கட்டடக்கலை தொகுப்புகள், அதன் வெவ்வேறு அணுகுமுறைகள், அவற்றின் வெளிப்பாடுகள் என்று அருமையான பேச்சாக அமைந்தது.
அதனை பற்றிய தொகுப்பினை பின்வரும் கட்டுரையில் தொகுத்துள்ளேன்.
முதலாவதாக ஆரோவிலில் வடிவமைப்பு செய்து வரும் கணேஷ் பாலா அவர்கள். இவர் ஸ்டுடியோ ஒன்று (Studio One) என்ற பெயரில் ஒரு அலுவலகத்தை நடத்தி வருகிறார். அவர் விவரித்த வகையிலேயே இதை காண்போம்,
![]()
முதலாவதாக அவர் காண்பித்த கட்டிடம், பாண்டிச்சேரியில் உள்ள, Anthonin Raymond என்பவர் 1936 முதல் 1943 ஆம் ஆண்டிற்குள் இதை கட்டி முடித்துள்ளார். இவர் பாண்டிச்சேரியில் அரவிந்த் ஆஷ்ரமம் அன்னை(mother) அவர்கள், அழைத்ததன் பேரில் கட்டடக்கலை வடிவமைப்பாளர் திரு எப். எல். ரைட்துடன் இம்பீரியல் ஹோட்டலை கட்டிக் கொண்டிருக்கும் பொழுது இங்கு வந்து இந்த பணியை மேற்கொள்கிறார். இது இந்தியாவினுடைய முதல் கான்கிரீட் கட்டடமாகும். நாம் வாழத் தகுதியான வகையில் ஒரு கட்டடத்தை, மாற்றி அமைக்கும் இயந்திரமாக காண வேண்டும் என பல கட்டடக்கலை வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். இந்த கட்டடம் தன்னுடைய வெளிப்புற சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் வகையில் தகவமைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் சிமென்ட் ஓடு பெரும்பாலும் பயன்பாட்டில் இருந்தது. அந்த ஓடுகளை ஜன்னல்களை போன்று தங்களது வடிவமைப்பில் பயன்படுத்தி இருக்கின்றனர். அதுவும் நேரத்திற்கு தகுந்தவாறு அதை மாற்றி அமைத்துக் கொள்ளும் வகையில் இதன் தொழில்நுட்பம் உள்ளது. இந்த கட்டடத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மரங்கள் இந்த கட்டடம் அதிகப்படியான வெப்பத்தை உள்ளிழுக்காமலும், அங்கு நிலவும் காற்றை கட்டடத்தின் உட்புறம் வரை கொண்டு செல்ல தக்கதாக உள்ளது. இந்த கட்டடத்தில் கண்ணாடி பயன்படுத்தப்படவில்லை. சுண்ணாம்பு, பூசாத கான்கிரீட் சுவர்கள், மரம் , கடப்பா கல் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அவரை மிகவும் ஈர்த்த ஒரு கட்டடம், எப்போதெல்லாம் அவர் இதை கடந்து செல்கிறாறோ அப்போதெல்லாம் ஒரு மிக அருமையான கட்டடத்தை கடந்த செல்கிறோம் என்ற எண்ணம் வந்து கொண்டே இருக்கும் என கூறினார்.
அவருக்கும், அவரின் நண்பருக்கும் முதலில் ஒரு கழிவறையை வடிவமைப்பை செய்வதற்கான பணி கிடைத்தது. ஆரோவிலில் இருந்த ஒரு மாணவர்களுக்கானக் கூடத்திற்கு ஒரு கழிவறை தேவைப்பட்டது. அந்த பணி அவர்களுக்கு கிடைத்தது. அந்த கட்டடத்தை கட்டடக்கலை நிபுணர் திரு. ராமன் கட்டியிருந்தார் . அவர் களிமண் கட்டுமான முறையில் கம்ப்ரஸ்ட் எர்த் பிளாக்( Compressed Earth Block) முறையில் கட்டியிருந்தார், இவர்கள் அதே முறையில் களிமண்ணை கொண்டு அதாவது ராம்டு எர்த் (Rammed Earth) முறையில் கட்டினார்கள். ஆனால் பழைய கட்டடத்தின் வடிவமைப்பில் இருந்த எல்லா வடிவமைப்பு கோட்பாடுகளையும் பின்பற்றி இந்த கழிவறையும் இருக்கும்படி அமைத்திருகிறார்கள். இந்த முயற்சியில் அவர்களுக்கு சத்பிரேம் என்ற Rammed Earth முறை கட்டுமான நிபுணர் உதவியாக இருந்தார். கழிவறை கட்டுவதற்கு தோன்றிய பள்ளத்தில் கிடைத்த களிமண்ணை பயன்படுத்தி இந்த கட்டுமானத்தை செய்து முடித்திருக்கிறர்கள். அவருடைய சொந்த வீடும் கூட ராம்டு எர்த் முறையில் கட்டியிருக்கிறார். களிமண்ணை கொண்டு கட்டும் பொழுது நேரடியாக சூரிய வெளிச்சம் படாமல் இருக்க பல இடங்களில் நாம் மேற்கூறையை அமைக்கும்படி இருந்தாலும், நம்மால் இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ முடியும் என்ற எண்ணம் இதன் மூலம் நமக்கு கிடைக்கிறது.
![]()
மலேசியாவைச் சேர்ந்த கட்டடக்கலை அறிஞர் கெவின், இந்தியாவிற்கு பல தொழில் முறை பயிற்சிகள், பேச்சு, வகுப்புகள் எடுப்பதற்காக வந்து செல்கிறார். இவர் கட்டடக்கலை ஆய்வுகளில் பயன்படுத்துகிற திறனாய்வு சிந்தனை ஊக்குவிக்கும் ஆசிரியர். மேலும் இவர் தன்னுடைய வடிவமைப்புகளின் மூலம் தான் கற்றவற்றையும், அதை செய்யும்பொழுது தான் அறிந்தவற்றையும், தன் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி அறிவு வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறார்.
அடுத்ததாக முழுவதும் கான்கிரீட்டால் கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடு. இது தரை தளத்திலிருந்து சிறிது உயரத்தில் இருக்கும்படி அமைத்திருகிறார்கள். அதைப் போலவே அந்த வீட்டில் கீழே எல்லா நேரங்களிலும் தண்ணீர் தேங்கி இருக்குமாறு ஒரு குளமும் உள்ளது. பெரும்பாலும் நீர் நிலைகளை அமைக்கும் பொழுது நம்மிடம் கொசுக்கள் அதிகம் வரும் என்ன செய்வீர்கள்? என்று கேள்வி வரும். ஆனால் இந்த குளத்தில் மீன்களை வளர்க்கிறார்கள். இதனால் கொசுக்கள் வரும் என்ற பயம் தேவையில்லை. நீர் நிலை இந்த கட்டடத்தின் நுண் காலநிலையில்(Micro Climate) மாற்றத்தை உருவாக்குகிறது. இதில் நான்கு பக்கங்களிலும் பெரிய நீண்ட சுவர்களை கொண்டு எங்கு தேவையோ அங்கு சிறிய தடுப்புகளை அமைத்து அறைகளை உண்டாக்கி இருக்கிறார்கள். இதன் நடுவில் ஒரு கூடமும் உள்ளது.
அடுத்த வடிவமைப்பான The Last School. இங்கு பிற பள்ளிகளில் உள்ளது போல வகுப்பறைகளோ, என்ன பாடம் நடத்த வேண்டும் என்ற முடிவை ஆசிரியரோ எடுப்பதில்லை. ஆரோவிலில் இதைப்போல ஒரு பள்ளி இருந்தது. அதை மூடும் தருவாயில் அதன் வழிமுறைகளை பின்பற்றி இந்த பள்ளி அமைக்கப்பட்டது. இங்கிருக்கும் மாணவர்கள் அவர்கள் அன்றைக்கு என்ன கற்க வேண்டும் என்பதை தீர்மானித்து, ஆசிரியரிடம் போய் கூறினால் அந்த தலைப்பில் படிக்க யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அந்த ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஒரு ஆசிரியரிடம் படம் படிக்கலாம். மாற்று சிந்தனையை வளர்க்கும் பள்ளி, அதற்கான இடத்தையும் தன்மையையும், வடிவமைப்பில் தீர்மானிக்கிறது.
நாம் பார்க்கும் பிற பள்ளிகளில் உள்ளது போல ஒற்றை வகுப்பறை இதற்கு போதுமானதாக இல்லை. அதனால் நிறைய சிறிய கற்கும் இடங்களை வடிவமைக்க வேண்டிய அவசியம் இந்த பள்ளியில் இருந்தது. அதேபோல இது ஒரே நேரத்தில், முழுவதுமாக வடிவமைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் அல்ல. பள்ளி நிர்வாகத்திற்கு எப்பொழுதெல்லாம் பணம் கிடைத்ததோ, அப்பொழுதெல்லாம் ஒரு சிறிய பகுதியை வடிவமைக்க வைத்து அதன் கட்டுமானத்தை நடத்தி இருக்கிறார்கள். அதேபோல இதன் பிற்பகுதியில் வருடம் தோறும் பிள்ளைகளின் ஓவியங்களை காட்சிப்படுத்தும் அறை தேவைப்பட்டது. அந்த கட்டடத்தையும், பள்ளி கட்டடத்தின் வடிவமைப்பை ஒத்து அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இந்த இரண்டு கட்டடங்களுக்கும், அதிகமாக வெட்பம் வராமல் இருக்கும் படி செய்ய இரட்டை மேற்கூரை அமைப்பை பின்பற்றி, நிறைய ஜன்னல்கள் உள்ளது. இந்த பள்ளியின் குளம், மரம்,செடி கொடிகளின் அமைப்பை இங்கு வரும் அனைவரும் பாராட்டினர். ஆனால் அது இங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் வடிவமைப்பு .
அலுவலகத்தில் அவர்கள் செய்யும் எல்லா வடிவமைப்புக்கும் மாதிரிகளை தயாரிக்கிறார்கள். நாம் இப்பொழுது கணினியின் உதவி கொண்டு முப்பரிமான மாதிரிகளை தயாரித்தாலும், அந்த இடத்திற்குள் இருக்கும் பொழுது எப்படி நாம் உணர முடியும்,அங்கிருந்து நாம் என்னவெல்லாம் காண முடியும் என்ற எண்ணத்தை தர இந்த மாதிரிகள் பயன்படுகிறது. அதைப்போலவே கிரீஷ் கர்ணாவத் எனும் கட்டடக்கலை வடிவமைப்பாளர் மிக அழகாக மரத்தில் அவருடைய மாதிரிகளை வடிவமைக்கிறார்.
அடுத்ததாக ஒரு வீட்டை புதுப்பிக்கும் பணி. இதை Andre Hababou என்ற வடிவமைப்பாளர் வடிவமைத்திருந்தார். இங்கு அந்த கட்டுமானம் என்ன வகையில் அமைந்திருக்கிறது, அதுவாகவே செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு வடிவமைப்பை அணுகுகிறார்கள். நிறைய தடுப்புகள் இல்லாமல் ஒரு இடம் , எந்த தடுப்புகளும் இல்லாமல் அடுத்த பயன்பாட்டு நிலைக்கு செல்லும் வகையில் வடிவமைப்பு உள்ளது.புதிதாக குடியேறியவர்களுக்கு சில மாற்றங்கள் தேவைப்பட்டது அதற்காக வீட்டின் படிக்கட்டு அமைப்பு மாற்றி அமைத்திருகிறார்கள்.
அவர் இது தொடர்பாக மேலும் சில புத்தகங்களையும் பரிந்துரை செய்தார். அதில் தி க்ஸ் ஆஃப் டைம் (The Curves of Time) என்ற புத்தகம் ஒரு பிரேசில் நாட்டு வடிவமைப்பாளர். இந்த புத்தகத்தில் ஆச்சரியம் என்னவென்றால் இதில் அவருடைய எந்த ஒரு கட்டடத்தைப் பற்றிய குறிப்புகளும் கிடையாது. இதில் மனிதர்களைப் பற்றியும், அவர் வாழும் இடங்களை பற்றியும் அவர் ஆவணப்படுத்தி இருக்கிறார். Ulrik Plesner என்ற டேனிஷ் வடிவமைப்பாளர் எழுதிய இந்த புத்தகம் அவருடைய கட்டடக்கலை அமைப்பைப் பற்றியது.
அடுத்ததாக எம்.சி வீடு (M.C.House) என்ன சொல்லப்படுகிற வீடு. இந்த நிலத்தின் அமைப்பு ஒரு முக்கோண வடிவத்தில் இருந்ததால் அதற்கு ஏற்றவாறு வடிவமைப்பும் இருந்தது. இது தரைத்தளத்தில் வாகனம் நிறுத்துமிடமாகவும், அதற்கு மேல் ஒரு வராண்டாவும் அமைத்திருக்கிறார்கள். அதேபோலவே இந்த வீட்டின் படுக்கையறையில் இருந்து வெளிப்புறத்தில் இருந்த இயற்கை வனப்புகளை காண தடையாக இருக்கும் ஒரு சுவரையும் இடித்து, ஒரு கண்ணாடி சுவரை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இது அந்த வீட்டின் உரிமையாளருடைய எண்ணம். பக்கத்தில் உள்ள காலி மனையில் பல காலமாக பல விதமான மரங்கள் வளர்ந்திருந்ததால், பலவித பறவைகளை அங்கு காண முடிகிறது. இந்த கண்ணாடி சுவர் அவர்களின் படுக்கையறையை வேறு தன்மையுடையதாக மாற்றி இருக்கிறது என்று அதை பயன்படுத்திய பிறகு கூறினார்கள் என்றார்.
அடுத்ததாக சிக்மா கல்லூரியிலிருந்து தன் கட்டடக்கலை படிப்பை முடித்த கட்டட கலை இயல் அறிஞர் பேச்சிமுத்து கென்னடி அவர்களின் பேச்சு இருந்தது. இவர் தான் படிக்கும் பொழுது தொழில்முறை பயிற்சியை கட்டடக்கலை வடிவமைப்பாளர் திரு முரளி முருகன் அவர்களின் முரளி ஆர்கெடெக்ஸ் அலுவலகத்தில் முடித்திருக்கிறார். அதன் பிறகு கொச்சினில் உள்ள வினோ டேனியல் அவர்களின் வால் மேக்கர்ஸ் அலுவலகத்தில் பணியாற்றி, அவரின் வடிவமைப்பு கோட்பாடுகளை பின்பற்றி அதன் தன்மை பிடித்து போக, அந்த வகையில் தன்னுடைய வடிவமைப்பு பாணியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்த்துக் கொண்டு அதற்காக பல விதமான பயிற்சிகளையும் மேற்கொண்டு உள்ளார். இவர் ஹர்த் ஸ்கேப் ஸ்டூடியோ(earthscape studio ) என்ற நிறுவனத்தை 2021 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளார். அதன் மூலமாக ஒரு மாடுகள் கட்டும் தொழுவத்தை புதுமையான முறையிலும்(Haven), ஒரு பண்ணை வீட்டையும்(Wendy House) அமைத்திருக்கிறார்.
இந்த இரண்டு கட்டுமானங்களும் உலக அளவில் கட்டடக்கலை இயல் பற்றி பேசும் பல பத்திரிகைகளிலும், ஆராய்ச்சி முறைகளிலும் பேசப்படும் கட்டடங்கள் ஆகும். இந்த மாடுகள் கட்டும் அமைப்பை பொருத்தவரை அங்கு உருவாகும் சாணம் போன்ற தேவையற்ற பொருட்களை வெளியேற்றுவதிலும், அந்த இடத்திற்கு தேவையான ஒளியை உள்ளே கொண்டு வருவதும் வடிவமைப்பில் இருக்கும் சவால்கள் ஆகும். அது ஒரு மலைபாங்கான பகுதியாக இருந்ததால் சமதளம் கிடைக்கப்படவில்லை. அதேபோல அங்கு இருக்கும் எந்த மரத்தையும், இந்த கட்டுமானத்திற்காக வெட்டக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு உள்ளார். மலை பிரதேசம் என்பதால் அங்கு காற்றின் நிலைப்பாடும் வேறு மாதிரியாக இருந்தது. தற்காலிகமான ஒரு அமைப்பையோ, எடையில் குறைந்த கட்டுமானத்தையோ அங்கு வடிவமைப்பது தகுந்ததாக இருக்காது . அதனால் வலிமையான மற்றும் அந்த காற்றின் அமைப்புக்கு ஏற்ற வகையிலும் ஒரு கட்டுமானத்தை அங்கு வடிவமைக்க வேண்டிய சவாலை எதிர்கொண்டுள்ளார்கள். இந்த கட்டுமானத்திற்கு அவர்கள் வைத்துக் கொண்டது ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே. ஆனால் இதன் இரும்பு கம்பிகள் கொண்ட கட்டமைப்பு மட்டுமே பெரும் பகுதி பணத்தை செலவு செய்ய வேண்டி இருந்தது.
ஆரோவிலில் இருந்து செந்தில்குமார் தாஸ் அவர்கள் இந்த கட்டுமான அமைப்பிற்கு பெருந்துணை புரிந்தார். நிலம் ஏற்ற, இரக்கமாக இருந்த காரணத்தினால் இவர்கள் அடிமானத்தை நிர்ணயிக்க சிறிது சிரமப்பட்டார்கள். மேலும் இந்த கட்டுமானத்தை உருவாக்க சித்தாங்கல் என்னும் ஒரு வகையான செங்கல் பயன்படுத்தப்பட்டது. அதேபோல இவ்வகையான கட்டுமானங்கள் செய்யும் வேலையாட்கள் பெரும்பாலும் நிறைய சம்பளம் பெறும் வகையை சார்ந்தவர்கள். அதுவும் இவர்களுடைய செலவு திட்டத்தில் இல்லாததால், அருகில் இருந்த தேயிலை விவசாய வேலைகளை செய்த வேலையாட்களை இந்த பணிக்கு பயிற்சி கொடுத்து பயன்படுத்திக் கொண்டார்கள். அதேபோல மழையும் இந்த இடத்தில் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்துள்ளது. இவர்கள் அமைத்த கட்டுமானங்களை ஒரே இரவில் பெய்த மழை தரைமட்டமாக்கியதும் உண்டு. இதன் கட்டமைப்பு பகுதியை எடுப்பதும் பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொரு நாளும் கணினியின் மூலம் இந்த அமைப்பை வடிவமைத்து அதை நிஜத்தில் பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
அடுத்தது Wendy House என சொல்லப்படுகிற ஒரு பண்ணை வீடு. முதல் முதலில் அந்த நிலத்தை சென்று பார்க்கும் பொழுது அது அதிகமாக மரங்கள் வளர்ந்த ஒரு அடர்த்தியான காடாகவே இருந்துள்ளது. ஒரு காட்டிற்கு நடுவில் ஒரு பண்ணை வீட்டில் தங்கும் போது, நமக்கு தனிப்பட்ட அறைகள் வடிவமைக்கபட்டாலும் அது இயற்கையோடு சார்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணி, இதன் நடுவில் ஒரு கூடத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
மூன்றாவதாக, ராஜா ஷ்யாம் சுந்தர் அவர்களின் தொகுப்பு. ஒரு வடிவமைப்பை நாம் ஆரம்பிப்பதற்கு முன் , இவ்வளவு விசயங்களை கருத்தில் கொள்ள வேண்டுமா? என்று வியக்க தக்க அளவில் இவரின் வேலைகள் இருந்தது . இவர் சென்னை பி .டி. கிருஷ்ணன் அலுவலகத்தை வழிநடத்துகிறார். பெரும்பாலும் கல்லூரி வளாகங்கள் , தொழிற்கூடங்கள் அமைப்பதில் வல்லுநர்.
முதலில் சுற்றுசூழல் ஆய்வுகளில் இருந்து அவரின் வடிவமைப்பு தொடங்குகிறது. அதன் பிறகு மேலாண்மை திட்டங்களை வடிவமைக்கிறார்கள். அவர்களின் வடிவமைப்பு ஒரு மாநிலத்தை, நகரத்தை, அவர்களின் இடத்தை எப்படி பாதிக்கும் என்று ஆராய்கிறார்கள். அந்த இடத்தில என்ன நில அமைப்பு உள்ளது, நீர் அமைப்பு, அங்கு பாதுகாக்க தக்க ஈரநிலங்கள், மர வகைகள் போன்றவை உள்ளதா என்று அறிகிறார்கள். அந்த இடத்தில உள்ள பாரம்பரிய மர வகைகள், தண்ணீர் தேக்கம், சரிவு போன்ற எல்லாவற்றையும் அறிவியலின் துணைகொண்டு அணுகிறார்கள்.
தொழிற்கூடங்கள் அமைக்கும் போது அது எவ்வகையில் இயற்கையை பாதிக்கும், தண்ணீரின் ஓட்டத்தை பாதிக்கும் என்றும், சுற்றுசுழலை பாதிக்கும் என்று பார்க்கிறார்கள். நிலத்திற்கு மேல் உள்ள நீர் அமைப்பு மட்டும் இல்லை, நிலத்திற்கு கீழ் உள்ள நீரின் அமைப்பையும் கண்டு, கட்டுமானம் அதை தடுத்தால் அதை எப்படி சீரமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். காடுகளின் நடுவில் அமைக்கப்படும் மதில் சுவர் வடிவமைப்புகள் பாம்புகள், கீரிபிள்ளைகள் கடந்து போகும் வகையில் பல ஓட்டைகளை கொண்டிருக்கும். அவர்களின் கட்டடங்கள் தரவுகளின்(Data) அடிப்படையில் இருக்கும்.
ஒரு கல்லூரி வளாகத்தை வடிவமைக்கும் போது, நாங்கள அவர்களின் நேர அட்டவணையை அறிந்துக்கொண்டு, அது மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் வகுப்பறை, பயிற்சிகூடங்கள், ஆய்வுக்கூடங்கள் எந்த நேரங்களில், யார் யார் பயன்படுத்துவார்கள் என்று தரவுகளை அறிகிறார்கள். நடைபாதைகள் எவ்வளவு முக்கியம் என்று வார்த்தைகளில் சொல்வதை விட, அவர்கள் புரிந்துக் கொள்ளும்படி செய்வது முக்கியம். அதிலும் அவர்களின் கல்லூரி திறந்த பிறகு இந்த நடைபாதைகள் மாணவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக உள்ளது என்பதை அறிந்துக்கொண்டு, அதை போன்று இன்னொரு பாதையும் அமைத்துத்தரும் படி கூறுவது, அவர்களின் வடிவமைப்பை தரவுகளோடு சேர்ந்து, அவர்களின் அனுபவமும் உறுதிபடுத்துகிறது.
இவர் பகிர்ந்துக்கொண்ட பல வரைப்படங்கள் பெரிய கட்டுமானங்களை வடிவமைக்க இவரின் கட்டுமான பொறியாளர்கள் எத்தகைய பங்காற்றுகிறார்கள் என அறிய முடிந்தது. எவ்வளவு அறிவியல் சார்ந்த தரவுகள் ஒரு வடிவமைப்பு செய்ய தேவைப்படுகிறது என்பது அறிந்த போது வியப்பாக இருந்தது.
மூன்று வகையான கட்டடக்கலை தொகுப்புகள், வெவ்வேறு அணுகுமுறைகள், அவற்றின் வெளிப்பாடுகள் என்று அருமையான பேச்சாக அமைந்தது. இங்கு அறிந்துகொள்ள நிறைய இருக்கிறது, இதுபோன்ற இத்தகைய பேச்சுக்கள் இன்றைய இளைய தலைமுறை வல்லுநர்களை வழிநடத்த பயனுள்ளதாக இருக்கும். உரைகளில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழுவினருக்கு நன்றி.
![]()
![]()