இன்றைய மாறிவரும் சூழலில் கட்டிடக்கலை துறையிலும் AI – Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு தன் தடத்தை பதித்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. பல்வேறு விதமான வேலைகளுக்கு செயற்கை நுண்ணறிவு கொண்டு மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளது. புதிய வடிவமைப்புகளை செய்வதற்கும், அவற்றை நெறிமுறைப் படுத்துவதற்கும், அதிலிருந்து வேறுபட்ட வடிவமைப்புகளை கொண்டு வருவதற்கும் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.
பிறதுறைகளில் செயற்கை நுண்ணறிவு எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ, அதை போன்ற ஒரு தாக்கத்தை கட்டிடக்கலை வடிவமைப்பிலும் கொண்டு வரும். கட்டிடக்கலை கலைஞர்களுக்கு அவர்களுடைய புதுமையான எண்ணங்களுக்கு வடிவமைப்பு தர, அது நிகழ்த்தும் பொழுது என்ன வகையான சவால்களை சந்திக்க வேண்டும் என்பதையும், கட்டி முடித்த பிறகு அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்றும் செயற்கை நுண்ணறிவின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு கட்டிடத்தை வடிவமைக்கும் பொழுது அந்த கட்டிடத்தின் தேவையான ஒளி, காற்று மற்றும் வெப்பத்தை கணக்கிட்டு, அந்த கட்டிடம் மனிதர்கள் வாழ எவ்வளவு வசதியாக இருக்கும் என்பதை கணிக்க முடியும். இதுவே செயற்கை நுண்ணறிவின் மூலம் செய்யும் பொழுது, இந்த வசதிகளில் என்ன மாதிரியான குறைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அதை எந்தெந்த வகையில் சரி செய்து கொள்ளலாம் என்பதை முன்னமே கணித்து, சூழலுக்கு ஏற்ப அவற்றை நம்மால் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு கட்டிடத்தின் உள்ளே என்ன தட்பவெட்ப நிலை நிலவுகிறது, எத்தனை பேர் வசிக்கிறார்கள், அறைக்குள் வரும் வெளிச்சத்தின் அளவு போன்றவற்றை தானாகவே மாற்றி அமைத்து, அங்கு வாழ்வு மனிதர்களின் தேவைக்கு ஏற்ப ஒரு சூழலை உருவாக்கி தருகிறது.
அதேபோலவே ஒருங்கிணைக்கப்பட்ட கணிணி சேவை (Cloud computing) என சொல்லப்படுகிற, நாம் வடிவமைக்கும் எல்லா கட்டிடங்களின் வடிவமைப்பையும் ஒரே இடத்தில் பாதுகாத்து, எங்கிருந்து வேண்டுமானாலும் நம்மால் மாற்றங்களை செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இது பல ஊர்களில் உள்ள கலைஞர்கள் ஒரே நேரத்தில் ஒரு திட்டத்தில் வேலை செய்ய ஏதுவாக உதவியாக இருக்கும்.இன்றைய காலகட்டத்தில் பிம்(BIM) எனும் சொல்லப்படுகிற கட்டிடக்கலை வடிவமைப்பு மாதிரிகளை உள்ளடக்கிய மென்பொருள் நாம் கட்டிடங்களின் வடிவமைப்பை உருவாக்குவதற்கும், அதை பராமரிப்பதற்கும், அதன் தன்மையை உறுதி செய்வதற்கும், அதில் நாம் பயன்படுத்த வேண்டிய கட்டுமான பொருட்கள், அதன் திறன் போன்றவற்றை தீர்மானிக்கவும் பயன்படுகிறது.
இதில் என்ன வகையான மென்பொருட்கள் உள்ளது என்பதை அறியலாம்
Maket.ai
இந்த செயலி நாம் கொடுக்கும் இடத்திற்கு பல்வேறு விதமான வடிவமைப்புகளை உருவாக்கி தருகிறது . நாம் வேகமாகவும், குறைந்த நேரத்திலும் இந்த செயலின் மூலம் வடிவமைப்புகளை செய்திட முடியும்.
Midjourney
உங்களின் தேவைகளை வார்த்தைகள் மூலம் பதிவு செய்தால், அதை ஒரு கட்டிடமாக, வடிவமைப்பாக மாற்றி கொடுப்பதில் இந்த செயலி துணை நிற்கிறது . 2022 உருவாக்கப்பட்ட இந்த செயலில் பல்வேறு விதமான கட்டிடக்கலை வல்லுனர்கள், வடிவமைப்பாளர்கள், ஓவியர்கள் போன்றவர்களையும் பாராட்டுதலை பெற்றிருக்கிறது.
Spacemaker
ரியல் எஸ்டேட்(Real Estate) துறையில் உள்ளவர்களுக்கு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக நம்மால் ஒரு இடத்தில் என்ன வகையான கட்டிடங்களை வடிவமைக்கலாம், அது எவ்வளவு மக்களை கவரும் என்பதை அறிய இயலும். நம் நேரத்தையும், பணத்தையும் இதன் மூலமாக பாதுகாக்க முடியும்.
Sidewalklabs
நகர கட்டமைப்பில் வேலை செய்கிற கட்டமைப்பாளர்கள் கட்டிடக்கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் போன்றவர்களுக்கு இந்த செயலி உபயோகமாக உள்ளது. நாம் எந்த மாதிரியான இடங்களை உருவாக்க எண்ணுகிறோமோ, அது வடிவமைக்கப்பட்ட பிறகு எப்படி பயன்பாட்டில் இருக்கும், அங்கு புதுமையாக என்ன உருவாக்கலாம் போன்றவற்றை தரவுகளின் அடிப்படையில் நமக்கு பரிந்துரைக்கும் செயலி இது.
Get Floorplan
நாம் கைகளில் வரையும் வடிவமைப்பை இந்த செயலின் மூலமாக ஒரு முப்பரிமான படமாக மாற்றிக் கொள்ள முடியும். அதன் மாற்றங்கள் குறை நிறைகளை கண்டறிய இந்த செயலி உதவுகிறது.
Archistar
இந்த செயலி நமக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் எத்தனை வீடுகள் நம் கட்ட முடியும், அங்கு நிலுவையில் உள்ள கட்டுமான சட்டங்கள்எவை, அது எந்த நில அமைப்பின் கீழ் வருகிறது, தெருவின் அகலம் போன்றவற்றை கணக்கிடுவதற்கு உதவியாக இருக்கிறது.
Testfit
எந்த செயலியில் நம்முடைய இடம் எங்கு இருக்கிறது என்பதை பதிவு செய்து, அந்த இடத்திற்கு ஏற்றவாறு வடிவமைப்பு தன்மைகளையும், அருகில் இருக்கும் கட்டிடங்களின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதையும் நம்மால் கணிக்க இயலும். இதன் மூலமாக நாம் பல்வேறு வடிவமைப்பு மாதிரிகளை உருவாக்கி, எத்தனை வண்டிகள் நிறுத்துவதற்கான இடம் தேவைப்படும், சாலைக்கும் கட்டிடத்திற்கும் ஆன இடைவெளி போன்றவற்றை கணக்கிட்டு கொள்ளலாம்.
Interior Ai
இந்த சைலின் மூலமாக நாம் நம் வீட்டில் உள்ள அறையின் புகைப்படத்தையோ அல்லது இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தையோ, கொடுத்து இந்த செயலியில் உள்ள 16 கருக்களில் (Themes) ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும் பொழுது, அதன் தன்மைகள் கொண்ட ஒரு அறை எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைக்க இந்த செயலில் பயன்படுகிறது.
Digital blue foam
இதை நாம் இணையதள வாயிலாகவே பயன்படுத்திக் கொள்ள முடியும். நம் தரவுகளை கொடுத்து, நம் தேவைகளை தெளிவாக எழுதிய, பிறகு இந்த செயலியின் மூலமாக நம்மால் வடிவமைப்பை வேகமாக செய்ய முடியும்.
Hypar
இந்த செயலி கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு ( Structural Infrastructure)உருவாக்கவும், அதன் தன்மையை அறியவும் பயன்படுத்தப் படுகிறது. இதில் நாம் தரைதல மாதிரி படத்தையும் , பிற படங்களில் இருந்து நகல் எடுக்கவும், பிற மென்பொருட்களில் இருந்து தரவுகளை பெற்றுக் கொள்ளவும் பயன்படுத்தலாம்.
Cove Tool
இந்த செயலியின் மூலம் நமக்கு முன்பரிமான மாதிரிகள் செய்வதற்கு ஆகும் நேரம் குறைகிறது. அதைப்போலவே இதை நாம் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கும் SketchUp, Rhino போன்ற மென்பொருட்களிலும் பயன்படுத்திக் கொள்ள இயலும்.
Planner 5D
நாம் ஆரம்ப கட்ட வடிவமைப்பாளராக இருந்தாலும் இந்த செயலி நமக்கு பெரிதும் உதவும். இதன் மூலமாக நம்மால் தரைத் தளத்தையும், அதில் இருந்து முப்பரிமான அறைகளின் படங்களையும், அதே போலவே மெய் நிகர் உண்மை என சொல்லப்படுகிறது Virtual Reality மூலம் சுற்றி பார்க்கவும் இயலும்.
Homestyler
இது நாம் இப்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கும் மென்பொருட்களை போன்ற அமைப்பை கொண்டுள்ளது. சிறிய மாறுதல்களை இதில் காண முடிகிறது. இதன் உதவியால் நாம் தரை தல வரைபடம், மற்றும் அதன் பொருட்கள் போன்றவற்றை வடிவமைத்துக் கொள்ள முடியும். அதேபோல நம்மால் முப்பரிமாணத்தில் அந்த அறையை சுற்றிப் பார்த்து நாம் வைத்திருக்கும் பொருட்களின் தேவை, தன்மை போன்றவற்றை தீர்மானிக்க முடியும்.
Smartdraw
இந்த செயலி பல்வேறு விதமான வடிவமைப்புகளை தன்னுடைய தரவுகளில் ( Data Base) வைத்திருக்கிறது.நீங்கள் வடிவமைப்பு செய்யும்போது பலவகையான கட்டில்களின் மாதிரிகளோ, நாற்காலிகளின் மாதிரகளோ, தேர்வு செய்ய தேவைப்பட்டால் இதில் உள்ள வடிவமைப்புகளை பார்த்து அதை நீங்கள் உங்கள் கட்டிடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் சமையலறை பொருட்கள், ஓவியங்கள், மரம், செடி, கொடி வகைகள் போன்ற மாதிரிகளும் கிடைக்கிறது.
Homebyme
இந்த செயலி அறைகளுக்கு எந்த வகையான வண்ணங்கள், எந்த கம்பெனி பொருட்களை பயன்படுத்தலாம் என்று நமக்கு பரிந்துரைக்கிறது. அதேபோலவே நாம் பயன்படுத்தும் திரைச்சீலைகள, அதில் வண்ணங்கள் பரிந்துரையும் கிடைக்கிறது.
Havenly
இந்த செயலியை உருவாக்கியவர்கள் மரபொருட்கள் செய்யும் நிறுவனங்களுடன் கூட்டமைப்பில் இதை உருவாக்கியுள்ளார்கள். நீங்கள் உங்கள் அறையில் எந்த வகையான மர சாமான்கள் அல்லது பொருட்களை வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறீர்களோ,நீங்கள் வாங்காமலேயே அந்த நாற்காலியோ அல்லது சோபாவோ உங்கள் அறையில் என்ன மாதிரியான மாற்றத்தை உருவாக்கும் என்பதை புகைப்படங்களின் மூலம் உருவாக்கி கொடுக்கிறது.இதன் மூலம் பலவிதமான மாதிரிகள் கிடைக்கப்பெற்று நமக்கு பிடித்தவற்றை தேர்வு செய்து கொள்ள இது உதவும்.
Hutch
இந்த செயலியின் மூலம் நாம் எந்த ஒரு அறையின் புகைப்படத்தை கொடுத்தாலும் அந்த அறையின் வண்ணம், அங்கு வைக்கப்பட்டு இருக்கிற பொருட்கள்,அந்த அறைக்கு தேவையான விளக்குகள் போன்றவற்றை மாற்றி அந்த அறையின் புதிய புகைப்படத்தை இந்த செயலில் நமக்கு காண்பிக்கிறது. அதைப்போலவே அந்த அறையில் இருக்க வேண்டிய பூந்தொட்டிகள், சுவரில் மாற்ற வேண்டிய புகைப்படங்கள் போன்றவற்றையும், புத்தகங்கள் போன்றவற்றையும் இது பரிந்துரைக்கிறது.
Roomgpt
இந்த செயலியின் மூலம் நாம் ஒரு அறையின் புகைப்படத்தை எடுத்து,0 அதில் பதிவேற்றிய பிறகு அந்த அறைக்கு எந்த வகையான மாற்றங்கள் கொண்டு வருவது சிறந்ததாக இருக்கும் என்பதை இது தீர்மானித்துக் கொள்கிறது. எந்த வகையான சோபாக்கள், சுவர்களின் நிறங்கள், விளக்குகள், மரச்சாமான்கள் எங்கு வைக்க வேண்டும்,0எப்படி இருந்தால் வசதியாக இருக்கும் என்பது போன்று ஒரு புகைப்படத்தை நமக்கு அதன் முடிவு கொடுக்கிறது.
Leaperr
இந்த தொழில்நுட்பத்தில் நம்முடைய தேவைகளை பதிவு செய்து விட்டால், நமக்கு தேவையான வடிவமைப்பை உருவாக்க0 உதவியாக இருக்கிறது. இது ஆரம்ப கட்ட வடிவமைப்பாளர்களுக்கு வடிவமைப்பை புரிந்து கொள்ள பயன்படும்.
Ikea place
இந்த செயலியையும் நம் அறைகளுக்கு எந்த வகையான சோபா, விளக்குகள், மேசைகள்,கட்டில், தரை விரிப்புகள் போன்றவை பொருத்தமாக இருக்கும் என்பதை முடிவு செய்து தருகிறது.
Lexset. Ai
இது வீட்டின் உள் கட்டமைப்புக்காக உருவாக்கப்பட்ட செயலி. இதன் மூலமாக நம் வீட்டிற்கு என்ன வகையான பொருள் தேவைப்படும் என்பதை தீர்மானித்து அதை உபயோகமாக, அழகானதுமாக தேர்வு செய்து கொடுத்து விடும்.
Kaedim
இந்த செயலியின் மூலமாக நம்மிடம் உள்ள இரு பரிமாண புகைப்படங்கள் அல்லது நாம் வரைந்த படங்களை,செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட முப்பரிமான பொருட்களில் Solid Shapes ஆக மாற்ற முடியும். இதன் மூலமாக நாம் உருவாக்கிய முப்பரிமான பொருட்களை பிற செயலிகளில் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Texturelab
இது நான் எப்பொழுதும் பயன்படுத்தும் Adobe Photoshop கான கூடுதல் செயலி. இது நாம் எழுதும் எழுத்துக்களுக்கோ அல்லது புகைப்படங்களுக்கோ முப்பரிமான தன்மையை கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் இதைக் கொண்டு நாம் Texture, திட தன்மை அதிகமாக உள்ள தன்மையும், எழுத்துக்களுக்கு நிழல் தன்மையும் கொண்டு வர இயலும். இரண்டு பரிமாணங்களில் உள்ள ஒரு பொருளை முப்பரிமான நிலைக்கு கொண்டு செல்ல இந்த செயலி பயன்படுகிறது.
Lumalabs
இது ஐபோன் செயலிகளில் பயன்படுத்தப்படும் ஒரு மூப்பரிமாண தொழில்நுட்பமாகும். நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை, ஒரு திரைப்படத்தில் உள்ள தன்மையுடன் மாற்ற இந்த செயலில் உருவாக்கப்பட்டுள்ளது.
Plask
இதன் மூலமாக ஒரு அனிமேஷன் கதாபாத்திரத்தை உங்களால் உருவாக்க முடியும். இதற்கு உங்களுடைய புகைப்பட கருவி மற்றும் இணையதளம் போதுமானது. நீங்கள் எடுத்த படத்தை உங்களால் மாற்றங்கள் செய்து அதில் உயிரூட்ட முடியும். இது ஒரு தென் கொரிய நிபுணர்களால் உருவாக்கப்பட்ட முப்பரிமான மென்பொருள்.
நான் மேலே கூறிய மிட் ஜானி செயலியை பயன்படுத்தி இந்தியாவை சேர்ந்த மனஸ் பாத்தியா(Manas Bhatia) என்னும் கட்டிடக்கலை வடிவமைப்பாளர் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் அமைப்பை செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைத்துள்ளார். இது ஐப்பரியான் (Hyperion) என சொல்லப்படுகிற ஒரு செம்மர வகையை எடுத்துக்காட்டாக கொண்டு செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டது. மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்த மரம், அதில் படிக்கட்டுகள் வீட்டின் முன்மாதிரி, ஜன்னல்கள், வாசல் போன்றவற்றை அமைக்க வேண்டும் என்று வார்த்தைகளின் மூலம் அவர் கொடுத்த தரவுகளின் படி மிக பிரம்மாண்டமான ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் வடிவமைப்பு செயற்கை நுண்ணறிவு மூலமாக கிடைத்திருக்கிறது.
மேலும் இதைப் பற்றி பேசும்பொழுது, நாம் வாழும் கட்டிடங்கள் நம்முடைய ஏசி காற்றை தாண்டி, சிமெண்டும், கண்ணாடி பொருட்களையும் கொண்டு ஒரு வாழும் கட்டிடம் என கூற முடியுமா? என்பதற்கான பதிலாகவே இயற்கைக்கும் கட்டிடங்களுக்குமான உறவாக இந்த வடிவமைப்பை நான் பார்க்கிறேன். அதற்கு செயற்கை நுண்ணறிவு எனக்கு பெருந்துணை செய்திருக்கிறது என கூறுகிறார். மேலும் அவர் தான் வடிவமைக்கும் கட்டிடங்களை பற்றி கூறும் பொழுது, இயற்கையில் உள்ள வடிவமைப்பை உற்று நோக்கி அது உருவாக்கும் நெட்வொர்க் போன்றவற்றை ஆராய்ந்து மிகச் சிறிய நுண்ணுயிர்கள் எப்படி வாழ்கிறது என்பதை அறிந்து கொண்டு அதை கட்டிடங்கள் பின்பற்றுமாறு வடிவமைக்க வேண்டும் என்று கூறுகிறார். இது கற்பனையாக இருந்தாலும் வரும் காலத்தில் மனித இனம் இப்படியாக இயற்கையோடு இணைந்த வடிவமைப்புகளை செய்வது அவசியம்.
இதற்காக நம் ஊரில் செயற்கை நுண்ணறிவை கொண்டு தன்னுடைய கட்டிடக்கலை வடிவமைப்பை செய்து கொண்டிருக்கும் சமீர் அவர்களுடன் ஒரு சிறிய கலந்துரையாடல்.. அதில் அவர். ..
கிரசன்ட் பல்கலைக்கழகத்திலிருந்து 2016 ஆம் ஆண்டு இளங்கலை கட்டிடக்கலை இயல்படிப்பை முடித்திருக்கிறார். படிக்கும் காலத்திலேயே கட்டிடக்கலை சார்ந்த மென்பொருட்களை பயன்படுத்துவதில் ஆர்வம் கொண்டிருந்தார். இது தன் எண்ணங்களை ஒரு வடிவமைப்பாக கொண்டு வருவதில் உதவுகிறது என்று கூறினார். தன் சக நண்பர்களுடனும் கட்டிடக்கலை வடிவமைப்பில் உள்ள வடிவமைப்பாளர்களுடனும் கலந்து உரையாடடும் போது அவர்களும் இதையே கூறியதாக சொல்கிறார்.
அதுவும் செயற்கை நுண்ணறிவின் மூலமாக கட்டிடக்கலையை அணுகும் பொழுது தம்மால் அதிக விஷயங்களை கற்றுக் கொள்ளவும், வெளிக்கொணரவும் முடிகிறது. சென்னையில் கட்டிடக்கலை வடிவமைப்பை செய்வதற்கென ஒரு அலுவலகத்தை துவங்கியவர், காட்சிப்படுத்தும் தேவைகளுக்காக படங்களை உருவாக்கியவர், தற்போது கட்டிடக்கலை வடிவமைப்பிலும் ஈடுபட்டுள்ளார் . குடியிருப்புகள், பொது இடங்கள், அலுவலகங்கள் வடிவமைக்கும் துறையில் இவரது அலுவலகம் இயங்குகிறது.
செயற்கை நுண்ணறிவில் நாம் படங்களை உருவாக்க முடியும் என்பதை தான் தற்செயலாக அறிந்து கொண்டுள்ளார். ஒரு வாடிக்கையாளரை சந்திக்கச் செல்லும் வேளையில் அவருக்கு காண்பிப்பதற்காக சில படங்கள் தேவைப்பட, அதை செயற்கை நுண்ணறிவின் உதவி கொண்டு தன் பயண நேரத்திலேயே உருவாக்கி அதை காண்பித்து அந்த வடிவமைப்பு வேலையையும் பெற்று இருக்கிறார். இது அவருக்குள் ஒரு ஆர்வத்தை தூண்டி வேறு என்ன மாதிரியான விஷயங்களை இதன் மூலம் செய்ய முடியும் என்ற முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு இருக்கிறார். இவர் Dall-e என்ற மென்பொருளை பயன்படுத்தி படங்களை உருவாக்குகிறார். ஆரம்பத்தில் வார்த்தைகளை பயன்படுத்தி படங்களை உருவாக்குதலில் உள்ள நுணுக்கங்களை புரிந்து கொள்ள சிரமம் ஏற்பட்டாலும், தொடர்ச்சியாக தினமும் அதில் சில மணி நேரங்களை செலவு செய்து கற்று இருக்கிறார்.
தன்னுடைய LinkedIn ப்ரோபைலிலும் இந்த படங்களை அவர் பதிவேற்றிய போது நாற்பதாயிரம் நபர்கள் வரை அதை பார்த்திருக்கிறார்கள் என்ற தகவலை பகிர்ந்து கொண்டார்.
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கட்டிடக்கலைத் துறையில் வல்லுனர் உங்களின் மாற்றாக பார்க்கப்படுமா? என்ற கேள்விக்கு, அப்படி நடப்பதற்கு சாத்தியங்கள் இல்லை என்றதோடு இன்றைக்கு நமக்கு பல தொழில்நுட்பங்கள் இருந்தாலும், அதை எப்படி பயன்படுத்த வேண்டும், என்ன வார்த்தைகளை பயன்படுத்தினால் எப்படியான உருவம் கிடைக்கும் என்ற புரிதல் எல்லோருக்கும் அமைவதில்லை. அதற்கான பயிற்சி நம்மை இத்துறையில் தனித்து காண்பிக்க உதவும். அதேபோலவே இந்த மென்பொருட்களில் நம்முடைய அறிவை வளர்த்துக் கொள்வது, துறையில் சிறந்து விளங்க உதவி புரியும். இதில் வடிவமைப்பாளர்களின் பங்கு அதிகம் உள்ளது.
நமக்கு தேவையான தரவுகளை நாம் Chat GPT மூலம் பெற்றுக்கொண்டு, அதன் உதவியோடு செயற்கை நுண்ணறிவில் படங்களை உருவாக்கினாலும், அது இரண்டு பரிமாணத்தில் (2D) தான் இருக்கும். அதை முப்பரிமான படமாக மாற்றுவதற்கு நாம் இன்றைக்கு பயன்படுத்துகிற பிற மென்பொருட்களின் உதவியோடு மாற்றிக்கொள்ள இயலும். அதனால் நமக்கு என்ன தேவை என்பதோடு, அதை எப்படி செய்ய வேண்டும் என்ற புரிதலும் நமக்கு இருப்பதாலேயே நம்ம இதை செய்ய முடிகிறது. இதனால் வடிவமைப்பாளர்களின் திறன் மேம்படுமே தவிர மாற்றாக அமைந்து விடாது.
இதை செய்யும்பொழுது வித்தியாசமாகவும், புதுமையாகவும் இருந்தது. நமது எண்ணங்கள் எப்படி மாறுகிறது என்பதை கவனிக்க முடிகிறது. ஒரு செயலியில் நமக்கு தேவையான படங்களை உருவாக்கும் பொழுது நாம் தரும் தரவுகளில் என்ன மாற்றங்களை கொண்டு வர முடியும், அது எப்படி அந்த மென்பொருளில் பயன்படும் என்றும், ஒவ்வொரு மென்பொருளும் ஒரே விவரத்திற்கு பல்வேறு விதமான படங்களை உருவாக்குவதையும் கவனித்திருக்கிறார். இது ஒரு வகையான ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.
எதையும் தொடர்ச்சியாக செய்யும்பொழுது அதற்கான புரிதலும், பலனும் இருக்கிறது. எடுத்துக்காட்டாக Mike Winkelmann d என்ற கலைஞர் 13 ஆண்டுகளாக முப்பரிமாண படங்களை தினமும் பதிவு செய்கிறார். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது அவருடைய எல்லா படங்களையும் வாங்கிக் கொள்ள ஒரு நிறுவனம் முன் வந்து, பெரும் தொகையை அளித்திருக்கிறது. இது அவர் தொடர்ச்சியாக அந்த காரியத்தை செய்ததற்கான பலன். அதேபோலவே தொடர்ச்சியாக கற்றலில் ஈடுபடுவோம். ஆனால் அதை குறித்த அறிவும், அதில் வேலை செய்யத் தக்க ஆற்றலும் நமக்கு கிடைக்கும்.
தினமும் நீங்கள் படங்களை உருவாக்குவதால் உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறது என்ற கேள்விக்கு?
முதலில் நிறைய நபர்கள் பக்கத்தை கவனிக்கிறார்கள். சிலர் இது நன்றாக இல்லை என்றும், இது எப்படி நமக்கு பயன்படும் என்றும் கேள்விகள் கேட்கிறார்கள். பலர் இந்த முயற்சியை நன்றாக இருக்கிறது, தொடர்ந்து செய்யுங்கள் என்றும் ஊக்கப்படுத்துகிறார்கள்.அடுத்ததாக இதை போன்ற செயற்கை நுண்ணறிவியின் மூலம் செய்யப்படுகிற மென்பொருட்கள் உருவாக்குபவர்கள் தன்னை தொடர்பு கொண்டு, கட்டிடக்கலைகள் சார்ந்த ஏற்கனவே நம் பயன்பாட்டில் இருக்கும் மென்பொருட்களில் என்ன மாதிரியான குறைகள் இருக்கிறது, என்ன தேவைகள் இருக்கிறது என்று கேட்கிறார்கள். இதன் மூலம் அதற்கான தீர்வை தர முடியும் என்ற எண்ணம் அவர்களுக்கு உள்ளது. நம் ஊர்களில் இருந்து இப்படியான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தைக்கு வந்தால் பெரு மகிழ்ச்சியாய் இருக்கும்.
திடீரென நிறைய பேர் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்துகிற மாதிரி இருக்கிறதா? என்ற கேள்வி கேள்விக்கு..
“Blender” என்ற மென்பொருள் கட்டிடக்கலை நிபுணர்களிடமும், மாணவர்களிடமும், முப்பரிமாண படங்கள் வரையும் கலைஞர்களிடமும் பயன்பாட்டில் இருந்தது. இது பலவிதமான கட்டிடக்கலை படங்களை உருவாக்குவதற்கும், ஓவியங்களை உருவாக்குவதற்கும் பயன்பட்டது. பலர் இந்த மென்பொருளை நன்றாக கற்றுக் கொண்டு,நல்ல வேலையிலும் அமர்ந்திருக்கிறார்கள். அதன் அடுத்த கட்டத்தில் செயற்கை நுண்ணறிவியை பயன்படுத்தி பல துறைகளிலும் பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டன. சென்று வருடமும் ஒரு சில மாதங்கள், பலரும் இதில் படங்களை உருவாக்கி பகிர்ந்து கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு ஏனோ பெரும்பாலானவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை. நிறைய குழுக்களில் நாம் இந்த செயலிகளை பயன்படுத்தும் அழைப்பு வந்து கொண்டிருந்தது. Midjourney என சொல்லப்படுகிற மென்பொருள் ஓரளவிற்கு எல்லாவற்றையும் விட மேம்படுத்தப்பட்ட மென்பொருளாக கருதப்படுகிறது. ஆனால் இதுவும் சென்ற வருடத்தில், ஆரம்ப கட்டக் கலைஞர்கள் பயன்படுத்தத்தக்க வகையில் இருந்து, தற்போது அதிக அம்சங்களுடன் பயன்பாட்டில் உள்ளது.
சில நேரங்களில் நம்மிடம் வடிவமைப்பை கேட்டு வரும் குடும்பங்கள் நாம் சொல்லும் கட்டிடக்கலை வடிவமைப்பு கருத்துக்களை கேட்டு அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருக்கிறார்கள். பொது மக்களுக்கும் கட்டிடக்கலை கலைஞர்களுக்குமான இடைவெளி அதிகமானதாகவும், புரிதல் இல்லாத ஒரு நிலையிலும் இருக்கிறது. அவர்கள் இந்த படங்களை பார்க்கும் பொழுது இதில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்று எண்ணிக்கொண்டு, அதைப்பற்றி பேச ஆரம்பிக்கிறார்கள். இதன் மூலமாக அவர்களுக்கு கட்டிடக்கலையின் மீது ஒரு புரிதல் ஏற்படுத்தும் முயற்சி இது என்று நினைக்கிறேன் என்றார்.
நாளைக்கான புதிய முயற்சிகள் வருகின்றன.
பேட்டிக் காணப்பட்டவர்: Ar. Sameer Z
![]()
சமீர் ஒரு கட்டிடக் கலைஞர், THE RENDERIT STUDIO எனப்படும் ஒரு சிறிய கட்டடக்கலை நிறுவனத்தின் நிறுவனர். இது ஆரம்பத்தில் கட்டடக்கலை வரைபடங்களை முப்பரிமாண காட்சிப்படுத்த்துதலின் கவனம் செலுத்தியுள்ளார். தற்போது குடியிருப்பு, F&B, பொழுதுபோக்கு மற்றும் அலுவகங்களை வடிவைமைத்து வருகின்றார்.
தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வத்தால், சமீர் பல்வேறு கட்டடக்கலை மென்பொருட்களை நன்கு அறிந்தவர் மற்றும் வடிவமைப்பு செயல்முறையை மேம்படுத்துவதற்காக, தீவிரமாக ஆராய்கிறார். அவர் தனது அறிவைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறார், மேலும் இந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் பல வடிவமைப்பு கருவிகளைப் பற்றி வளர்ந்து வரும் இளம் கட்டிடக் கலைஞர்கள் மற்றும் மாணவர்களுக்குக் கற்பித்து வருகின்றார்.
சமீரின் சமீபத்திய முயற்சியானது “கட்டிடக்கலையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை” ஆராய்வதாகும்.
Short Bio about the Interviewee:
Sameer is an architect who graduated from Crescent School of Architecture in the 2011-2016 batch. He is the founder of a small company called THE RENDERIT STUDIO, which initially focused on visualization projects but has now expanded to include design projects in residential, F&B, recreational, and office spaces.
With a passion for technology, Sameer is well-versed in various architectural software and actively explores their potential to enhance the design process. He enjoys sharing his knowledge and has even taught emerging architects and students about these tools.
Sameer’s latest endeavor involves delving into the possibilities of utilizing artificial intelligence in architecture.
பேட்டி எடுத்தவர்: Ar. Vidhya Lakshmi