IMG 20190714 082405

தமிழக சீனத் தொடர்பை கூறும் பல்லவனேஸ்வரம் புத்த விகாரை – காவிரிப்பூம்பட்டினம்

சிறு வயது முதலே நமக்கு புத்தரின் கதைகள் சொல்லப்பட்டு இருக்கிறது. இளவரசராக பிறந்து, வாழ்வின் எந்த துன்பங்களையும் அறிந்திடாத சித்தார்த்தர், வாழ்வின் நோக்கங்களையும், ஞானம் பெற வேண்டும் என்றும் நாடு, வீடு, பிள்ளை துறந்து தவம் புரிந்து புத்தர் ஆனது அவரின் வாழ்க்கை. அவருக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து அந்த மதத்தை பின்பற்றி பலர் வந்தபோது, கூடவே அதற்கான கட்டுமானங்களும் எழுந்தது.  நமது வகுப்பறைகளில் நாம் ஸ்துபி (Stupa) விகாரை (Vihara), சைத்தியம் (Chaithya) அல்லது கோவில் என சொல்லப்படுகிற வகைகளை பற்றி படித்திருக்கிறோம். 

தமிழ்நாட்டில் இதற்கான எச்சங்கள் ஏதாவது இருக்குமா? என்று தேடலில் இந்த கட்டுரை. வகுப்பறையில் இரண்டாம் ஆண்டு புத்தம் பற்றியும், அதன் கட்டிடக்கலை கட்டுமானங்கள் பற்றியும் நிறைய படித்திருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள புத்தம் சார்ந்த எந்த கட்டிடத்தை பற்றியும் நமக்கு பெரிதாக அறிமுகம் இல்லை.  ஆனால் இங்கு  புத்த விகாரங்கள் அகழ்வாய்வு செய்யப்பட்டு,  அதன் அடித்தளம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதை பற்றிய புரிதலுக்காக இப்பயணக் கட்டுரை …

தமிழகத்தின் நாகைபட்டினம் கடற்கரை நகரமாகும். புகார் நகரம் புத்த கோவில்களுக்காகவும், துறவிகளுக்காகவும் சிற்றூர் அமைப்பிலிருந்து பேரூராக மாற்றம் பெற்றுள்ளது. அங்கிருந்த மேட்டு நில பகுதிகளை தேர்ந்தெடுத்து விகாரைகள் கட்டப்பட்டு புத்த துறவிகள் நூல்கள் எழுதவும், அமைதியாக புத்த மதத்தை பின்பற்றவும் அமைக்கப்பட்டது. ஆனால் ஒரு காலகட்டத்தில் கோவில்களில் துறவிகளின் எண்ணிக்கை அதிகமாகி நெருக்கடி உருவாகிய பொழுது, வெவ்வேறு இடங்களில் இருந்த நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு புத்த பள்ளிகளை அசோகரின் துணை கொண்டு நிறுவினர். அதைச் சுற்றி புத்த துறவிகள் வாழ்வதற்கான தங்கும் இடங்களும் உருவாகியது.

சோழர்களின் கடற்கரை நகரமான காவிரிப்பூம்பட்டினம் சங்க காலத்தில் அவர்களின் தலைநகரமாகவும்,  துறைமுகமாகவும் விளங்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்த நகரம் அரசர்கள் வாழ அரண்மனையும், அமைச்சர்,படை தலைவர் வாழ இடங்களும்,  ஆட்சி கூடமும் பெற்றிருந்தது. அதன் அருகில் துறைமுகம் இருந்தது. துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டது. இதை புகார், பூம்புகார், காகத்தி, கம்பாபட்டி, காவிரிப்பூம்பட்டினம், சோழ பட்டினம் போன்ற பல்வேறு பெயர்களில் அழைத்துள்ளனர்.  பால்ட்மீ (Ptolemy ) இதை “காவிரி சாம்ராஜ்யம்” என்றும், பெரிபிளஸ்(Periplus)  இதை “கமரா” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நகரத்தை பட்டினப்பாக்கம் என்று அழைத்தனர் அதன் அருகில் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், பொதுமக்கள் போன்றோர் வாழ்ந்தனர். இந்தப் பகுதி மருவூர் பாக்கம் என அழைக்கப்பட்டது. தாளமீ  நாகப்பட்டினத்தை “பன்னாட்டு நகரம்” (Metropolis) என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது பல வெளிநாட்டவரும் வந்து வணிகம் செய்யும் நகரமாக இவ்வூர் இருந்தது என்பதை இது குறிக்கிறது. பல வணிகர்கள் பௌத்த மதத்தோடு தொடர்புடையவர்களாக இருந்துள்ளனர்.

தமிழ் இலக்கியங்களில் காவிரிப்பூம்பட்டினம்,  1-முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை துறைமுக நகரமாக,  பல்வேறு பெரிய கப்பல்களை தாங்கி நின்றதாகவும்,  அதன் கடற்கரையில்  வியாபாரிகளும்,  வியாபாரம் சார்ந்த தொழில் செய்பவர்களும் நிறைந்திருந்தனர் என்றும் குறிப்பிடுகிறது.  காற்றில் பிற நாட்டு கொடிகள் அசைந்து ஆடுவதை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் அங்கு இருந்த உயரமான கலங்கரை விளக்கத்தை குறித்த செய்திகளும், யவனர் இருக்கை என்ற அழைக்கப்பட்ட, வெளிநாடுகளில் இருந்து வரும் வியாபாரிகளுக்கான தங்குமிடத்தை பற்றிய செய்திகளும் உள்ளது. இங்கு இருந்த கோவில் ஒன்றிற்கு, சீன மன்னர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நரசிம்ம வர்மன் ஒரு கோபுரத்தை எழுப்பி இருக்கிறான். இதை கல்வெட்டின் மூலம் அறியலாம்.  இந்த கோபுரம் காலப்போக்கில் “வெளி கோபுரம், புது வெளி கோபுரம்” என்றும்  பெயர் பெற்றது.  வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் இதை “சீன பக்கோடா” என்று அழைத்தனர். 

புது வழி கோபுரம் ஐந்து அடுக்குகளை கொண்டது. 65 அடி உயரம் கொண்டிருக்கலாம், 41 சதுர அடி பரப்பு உடையது. செங்கல் கட்டுமானம். சிற்ப வேலைப்பாடுகளையும் கொண்டு இருந்திருக்கலாம். இதில்  ஒரு புத்தர் சிலையும் கிடைத்தது. 1859 ஆம் ஆண்டு, இந்த புது வெளி மண்டபத்தை  பாதுகாக்க வேண்டி மாநில தலைமை பொறியாளரால் அரசுக்கு, அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால் பரிந்துரைக்கு இசைவு, அளிக்கப்படும் அது பராமரிக்கப்படவில்லை. அதன் பிறகு 1882 ஆம் ஆண்டில் கோபுரம் இடிக்கப்பட்டுள்ளது. 

ராஜராஜ சோழன் காலத்தில் இவ்வூரில் இருந்த சூளாமணி விகாரைக்கு அறக்கட்டளையாக கொடுத்த கொடைகளை ஆணைமங்கலம் செப்பேடு கூறுகிறது. கடாரத்தை ஆண்ட சைலேந்திர குலத்தில் சீரீ விஜய சூளாமணி வர்மன் நாகப்பட்டினத்தில் புத்த விஹாரம்  கட்ட விரும்பினான். ராஜராஜ சோழனின் துணை கொண்டு பணிகளையும் தொடங்கினான். கோவில்  கட்டி முடிப்பதற்கு முன் அவன் இறந்து விடவே, அவன் மகன் அந்த கோவிலை நிறைவு செய்து சூளாமணி புத்த விகாரை என பெயரிட்டான். இதே விஹாரைக்கு ராஜேந்திர சோழன் காலத்தில் இரண்டு பள்ளிகள் இணைக்கப்பட்டன. முதலாம் குலோத்துங்கன் சூளாமணி விகாரத்திற்கு நிலங்களை கொடையாக கொடுத்தான். சூளாமணி விகாரத்தைப் பற்றி லேய்டன் சிறிய செப்பேடும் குறிப்பிடுகிறது. 13ம் நூற்றாண்டில் மார்கோபோலோ நாகப்பட்டினத்தைப் பற்றி அவருடைய பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 

நாகப்பட்டினத்தில் 1926 ஆம் ஆண்டிலும்,  1934 ஆம் ஆண்டிலும் நடந்த அகழ்வாய்வுகளில் 350 வெண்கல புத்தர் சிலைகள் கிடைத்தன. இந்தோனேசிய கலைபானியை பின்பற்றியவை.  உலக அளவில் அதிகமாக கிடைத்த சிலைகளில் புத்தர் சிலைகளும் ஒன்று. பல்வேறு வகையான உருவ அமைப்பிலும், உயரங்களிலும் உலக அளவில் பல சிலைகள் காணப்படுகிறது. 

வியாபாரத்திற்கு மட்டுமல்லாமல் காவிரிப்பூம்பட்டினம் புத்த மதத்திற்கும் ஒரு சிறந்த ஆன்மீக தளமாக திகழ்ந்திருக்கிறது.  மணிமேகலை, சிலப்பதிகாரம், மகாவம்சம், புத்த வம்ச சப்தகதை  போன்ற நூல்களிலும் காவிரிப்பூம்பட்டினத்தின் புத்த மத தொடர்பை பற்றிய குறிப்புகள் உள்ளது. 

பல்லவனேஸ்வரம்

பல்லவனேஸ்வரம், என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வுகளின் மூலம் அங்கு இருந்த புத்த விகாரம் மற்றும் கோயில் வெளிப்பட்டுள்ளது. இது நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டிடத்தில் அடித்தளம் மட்டும் அகழ்வாய்வில் கிடைத்துள்ளது. சில கற்களால் செய்யப்பட்ட பொருட்களும், சுதையால் செய்யப்பட்ட உருவங்களும் கிடைத்துள்ளது. 

அகழாய்வில் இங்கு ஒரு புத்த விகாரம் 9 அறைகளைக் கொண்டதாக இருந்தது என்று அறிய முடிகிறது. அதற்கு தெற்கில் ஒரு பொதுக்கூட்டமும், அதன் பக்கங்களில் அறைகளும் இருந்துள்ளது.  இது முழுதும் செங்கலால் கட்டப்பட்ட கட்டுமானம். இதன் செங்கற்களின் அளவு 42  x 24×10 சென்டிமீட்டர். அகழ்வாய்வின் இப்போது  புத்தர் செப்பு திருமேனியும் ,  சுடு மண்ணால் செய்த  சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது. மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டில் சுண்ணாம்பால் செய்த புத்தர் பாதத்தை  விகாரத்திற்கு சிறிது தொலைவில் கண்டுபிடித்தனர்.நாகர்ஜுன கொண்டாவில்  உள்ள புத்தர் பாதத்தை இது ஒத்து இருக்கிறது. 

சைத்தியம் அல்லது கோவில்,  விகாரைக்கு தெற்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது. இதன் அடித்தளம் தற்போது நன்றாக பராமரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஒரு சதுர அமைப்பு கொண்டதாகவும்,  ஐந்து பக்கங்களில் அறைகள் நீண்டு செங்கற் அடித்தளமாக உள்ளது. இது ஒரு தளத்திற்கு மேல் இருந்த கட்டிடமாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. கற்கள் இந்த கட்டிடத்தின் தூண்கள் அமைக்க மட்டும் பயன்பட்டு இருக்கலாம் என்றும்,மற்றவை செங்கற் கட்டுமானமாக இருந்திருக்கவே வாய்ப்பு இருக்கிறது. சுவர்கள் வண்ண ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கலாம்.  வண்ணங்களின் சில பகுதிகள் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கட்டிடம் எத்தனை தளங்களை கொண்டிருந்தது என்று அகழாய்வில் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை. 

 

Leave a Comment

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.