VY ஆர்கிடெக்சர் ஸ்டுடியோவால் (Vy architecture studio) வடிவமைக்கப்பட்ட ‘வாழ்’ வீடு (Vaazh House), வெறும் செங்கல் மற்றும் சிமெண்ட்டால் கட்டப்பட்ட கட்டிடம் அல்ல; அது அண்டையாரோடும், இயற்கையோடும், தமிழ் மரபோடும் பிணைந்த ஒரு வாழ்விடத்தை மீட்டெடுக்கும் முயற்சி. சென்னைக்கு அருகில் தண்டரையில் (Thandarai) ஒரு கிராமத்தின் நடுவே அமைந்துள்ள இந்த வீடு, பாரம்பரிய வடிவமைப்பையும் நவீன கட்டடக்கலையையும் அழகாகக் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது.
திண்ணை – சமூகத்தின் இதயம்
இந்த வீட்டின் வடிவமைப்புத் தத்துவத்தின் மையமாக இருப்பது, ‘திண்ணை’ ஆகும். தமிழ்க் குடும்பங்களில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் இந்த உயர்ந்த, கூரையிடப்பட்ட திண்ணை, அயலார் சும்மா அமர்ந்து பேசவும், அண்டையிலுள்ள குழந்தைகளோடு விளையாடவும், நாய்களுக்கு உணவளிக்கவும் பயன்படும் ஓர் பொதுவெளி.
இந்த நிலப்பரப்பில் வீடுகளுக்கு இடையே உண்மையான எல்லை என்று எதுவும் இல்லாத சூழலில், இந்த திண்ணைதான் சமூகப் பிணைப்பின், அதாவது சொந்தத்தின் ஒருமையின் அடையாளமாக செயல்படுகிறது.
இவ்வீட்டில் உள்ள பொது இடங்கள் திண்ணை, வரவேற்பறை மற்றும் முற்றம் ஆகும். தனிப்பட்ட இடங்களாக சமையலறை மற்றும் படுக்கையறைகள் உள்ளன.
இந்த மூன்று பகுதிகளும் பார்ப்பதற்கு ஒன்றோடொன்று இணைந்தவாறு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. வீட்டின் நடுவில் ஒரு முற்றம் (courtyard) உள்ளது. இந்த முற்றத்தில் உள்ள ஒரு வளைவுச் சுவர் ஒரு தனித்துவமான அம்சமாகும். இது மேற்கிலிருந்து வரும் கடுமையான சூரிய ஒளியைத் தடுத்து, வீட்டின் உள்ளே குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
இந்த வளைவு கூரை வரை நீண்டு, காலைச் சூரிய ஒளியினை வீட்டுக்குள் அனுமதித்து, ஒரு திறந்த வெளியை உருவாக்குகிறது. இந்த வளைவில் உள்ள துளைகள் வழியாக, சூரியன் தரையில் ஒளியும் நிழலும் கலந்த அழகான வடிவங்களை நிழலாட வைக்கிறது, மேலும் மழைத்துளிகள் முற்றத்தில் விழ அனுமதிக்கின்றன. இந்த வளைவு வெறும் சுவர்போல இல்லாமல், மேலே ஏறிச் சென்று வானில் மிதக்கும் மேகங்களை ரசிக்க உதவும் ஒரு விளையாட்டுச் சுவராகவும் (play wall) செயல்படுகிறது. இதன் மூலம் தரைப்பகுதியையும் கூரையையும் இணைத்து ஒரு முப்பரிமாண பொழுதுபோக்கு இடமாக மாற்றுகிறது.
வீட்டுக்குள் இயற்கையோடு ஒரு சரணாலயம்
இந்த வீட்டின் தரைப்பகுதி மண் போன்ற ஆக்சைடு பூச்சு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கும், வெறும் பாதங்கள் நடப்பதற்கும் குளிர்ச்சியான, ஈரப்பதமான உணர்வை அளிக்கிறது. முற்றத்தில் வைக்கப்பட்டுள்ள ஆற்றங்கரைப் பாறைகள் (river rocks), அருகில் ஓடும் ஆற்றை நினைவூட்டும் குறியீடுகளாக உள்ளன.
இந்த முற்றம் குடும்பத்தை மட்டுமல்லாது, பறவைகள், பூச்சிகள், நாய், பூனை போன்ற அனைத்து உயிரினங்களையும் வரவேற்று, வீட்டை அவை வாழும் ஒரு குட்டி சரணாலயமாக மாற்றுகிறது. இங்கு வாழ்பவர்கள், குளிர்ந்த தரையில் வெறும் காலால் நடப்பது, திறந்த கூரையிலிருந்து விழும் மழைத்துளிகளை உணர்வது, தெளிவான வானத்தில் நட்சத்திரங்களைப் பார்ப்பது என இயற்கையின் உண்மைத்தன்மையை உணர்ந்து வாழ்கிறார்கள்.
Watch: https://www.youtube.com/watch?v=XhS4bL58bRE
Courtesy: VY Architecture Studio